மத்திய கிழக்கு தொழிலாளர் விடயத்தில் அரசு தலையீடு செய்யவில்லை

0
Ivory Agency Sri Lanka

கொரோனா தொற்றுநோயால் நாடு திரும்ப முடியாத பல்லாயிரக்கணக்கான மத்திய கிழக்கு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள 22 தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் கண்டித்துள்ளன.

கொரோனா தொற்றுநோயால் நாடு திரும்ப முடியாது குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள தொழிலாளர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை அரசாங்கம் தட்டிக்கழித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

“ஒரு சரியான திட்டமிடலின் கீழ் அவர்களை மீள அழைத்துவர வேண்டுமெனவும், எனினும் அவ்வாறு செய்யாமல், அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்காமல், இருப்பது கண்டிக்கத்தக்கது” என 22 தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் மட்டும், 19,000ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொற்றுநோய் காரணமாக குறைந்த வசதிகளுடன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நாடுகளில் வீசா காலம் காலாவதியாகியுள்ள நிலையில், அந்த நாடு வழங்கியுள்ள கருணை காலமும் நிறைவடையும் நிலையில், அவர்களை மீண்டும் அழைத்து வருவது அரசாங்கத்தின் பொறுப்பு என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது, அரசாங்கம் அவர்களிடம் ஒருதொகை கட்டணத்தை அறவிடுவதாகவும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான நிதியத்தில் பில்லியன் கணக்கான ரூபாய்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்கங்கள் வெளிநாட்டு தொழில் சந்தையில் இலங்கைக்கு அந்நிய செலாவணியை பாரியளவில் வழங்கும் மத்திய கிழக்கு தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய காரணி எனவும் குறிப்பிட்டுள்ளன.

குறித்த தொழிலாளர்களின் வாழ்வு அச்சுறுத்தலில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், தேவையான வசதிகள் மற்றும் வைத்திய வசதிகளை வழங்குவதற்கும், அந்த நாடுகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு வைத்திய சேவையை வழங்குவதற்கும், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.

மத்திய கிழக்கிலிருந்து வரும் தொழிலாளர்களை முறையான ஏற்பாடுகளின் நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், நோயுற்றவர்களை பராமறிக்கவும் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் வாழ்வை தொற்றுநோய் ஆபத்திலிருந்து மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை வர்த்தக மற்றும் பொது ஊழியர் சங்கம், இலங்கை அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை ஒன்றியம், அனைத்து இலங்கை பொது முகாமைத்துவ அலுவலர்கள் சங்கம், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம், நீர்ப்பாசன பொது தொழிலாளர் சங்கம், அரச ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பு, மாகாண முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கம், ரயில்வே ஊழியர் சங்கம், வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் சங்கம், அகில இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், தேசிய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், அரச தொழிற்சாலை ஊழியர் சங்கம், ஐக்கிய அஞ்சல் சேவை சங்கம், ஐக்கிய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், அனர்த்த முகாமைத்துவ சேவை நிலைய ஊழியர் சங்கம், இலங்கை தொழிற்சங்க கூட்டமைப்பு, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கூட்டு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் பணிபுரிந்த நிலையில், நோய்த் தொற்றுக்குள்ளாகி நாடு திரும்பிய இலங்கையர் தொடர்பில், ஆளுங்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் வெளியிட்ட அவமானகரமான கருத்து தொடர்பிலும் குறித்த தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளன.

Facebook Comments