மாணவர்களை அழைத்துவர அதிக கட்டணம்; அரசின் இரட்டை வேடம் அம்பலம்

0
Ivory Agency Sri Lanka

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்கும் நோக்கில், விமான சீட்டுகளுக்கு அதிக விலை செலுத்த வேண்டிய நிலைக்குள்ளான, அரச புலமைப்பரிசில் பெறும் அனைத்து மாணவர்களினதும் பயண செலவுகளையும் அரசாங்கம் திருப்பி செலுத்த வேண்டுமென, இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களை அரசாங்கத்தின் செலவில் நாட்டிற்கு திருப்பியழைக்கப்பட்ட அதேவேளை, அரச உதவித்தொகை பெறும் மாணவர்கள் கூடுதல் பணம் செலுத்திய பின்னரே இலங்கைக்கு திரும்ப முடிந்தததாக இலங்கை ஆசிரியர் சங்கம் கடந்த வாரம் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது.

சிக்கித் தவிக்கும் மாணவர்களை வார இறுதியில் இந்தியாவிலிருந்து அழைத்து வருவதற்காக, அதிக கட்டணம் வசூலித்த விடயத்தை இலங்கை விமான நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

விமான நிறுவனம் “நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அப்பாற்பட்டு ஏற்படும்” செலவுகளை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்திருந்தது.

“விமானம் கொரோனா மனிதாபிமன நடவடிக்கையின் கீழ் இயக்கப்பட்டதாகவும், குழுவினருக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சுத்திகரிப்பு, கிருமி நீக்கம் முறைகள் ஆகியவற்றிற்கான செலவை மேலும் அதிகரித்ததாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக வைரஸ் பரவிய சீனாவின் வுஹானில் இருந்து தனியார் பல்கலைக்கழக மாணவர்களை அழைத்து வந்தமைக்கான செலவு தொடர்பிலான விபரங்களை இலங்கை விமான நிறுவனம் வெளியிடவில்லை.

கொரோனா தொற்றுநோயை அடுத்து, எந்த கட்டணமும் இன்றி, சீனாவின் வுஹானில் இருந்து மாணவர்களை அரசாங்கம் திரும்ப அழைத்து வந்தபோதும், அரசு உதவித்தொகை பெற்று உயர் கல்விக்காக இந்தியாவுக்குச் சென்ற மாணவர்கள் அதிக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனினும், வெளிநாட்டிலிருந்து மாணவர்களை திருப்பி அழைப்பது தொடர்பிலான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டுமென, இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விமான நிறுவனத்திற்கு ஏற்படும், கூடுதல் செலவீனத்தை, அரச உதவித்தொகை பெறும் மாணவர்கள் மீது சுமத்துவது வருத்தமளிப்பதாக, ஆசிரியர் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார், எனினும் இதனை மாணவர்களை மீட்கும் “மனிதாபிமான நடவடிக்கை” என சித்தரிக்க அரசு முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தியதலாவை இராணுவ முகாமில், சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர், கருத்து வெளியிட்ட, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இந்த நடவடிக்கை இலங்கைக்கு ஒரு இராஜதந்திர வெற்றி எனவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தெளிவான தலைமைத்துவத்தின் அறிகுறி எனவும் தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸால் நெருக்கடியை சமாளிக்க, இலங்கை சீனா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல்வேறு நாடுகளின் உதவிகளைப் பெற்றுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள, தங்கள் பிள்ளைகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு, தமது சக்தியை மீறி செலவுசெய்துள்ள பெற்றோர், மீண்டும் தமது பிள்ளைகளை கல்வியை நிறைவு செய்யும்பொருட்டு திருப்பியனுப்ப வேண்டிய தேவையுள்ளதாகவும், ஆகவே மாணவர்களிடமிருந்த அறவிடப்பட்ட கட்டணத்தை முழுமையாக மீள செலுத்துமாறு ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டார்லின் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Facebook Comments