இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு உண்மையான நோக்கம் காணப்படுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெ எதிர்க்கட்சியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நீதி அமைச்சருக்கு சவால் விடுத்துள்ளார்.
“மதுமாத அரவிந்த கடந்த காலங்களில் பல இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளார், இனவாத கருத்துக்களை மாத்திரமல்ல கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வன்முறையை தூண்டும் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். நீதி அமைச்சர் இப்போது அவருக்கு எதிராக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் சட்டத்தை செயல்படுத்த முடியும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் இனவாதத்தை தூண்டியதாக நீதி அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
“கம்பஹா மாவட்டத்தில் தேர்தல் முடிவுகளைப் பார்த்தபோது, எங்களுக்கு முஸ்லீம் வாக்குகள் அவசியமில்லை, தமிழ் வாக்குகள் அவசியமில்லை, எங்களுக்கு வாக்குகளே வேண்டும் எனக் குறிப்பிட்ட ஒருவர் தேர்தல் முடிவுகளுக்கு அமைய பட்டியலில் இறுதி இடத்தில் காணப்பட்டார்.” என அலி சப்ரி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட ”வெதுன பிவிதுறுஹெல உறுமய”வின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த, விருப்பு வாக்கு எண்ணிக்கை பட்டியலில் இறுதி இடத்திற்கு தள்ளப்பட்டார்.
அவர் தனது பிரச்சாரத்தின்போது வாக்காளர்களிடம் சிங்கள வாக்குகளை மாத்திரமே தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டிய ஏராளமானோர் இருந்ததை சுட்டிக்காட்டிய முஜிபுர் ரஹ்மான், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் சட்டத்தை அமல்படுத்துமாறு நீதி அமைச்சரிடம் கேட்டுள்ளார்.
மதங்களுக்கு இடையிலான பாகுபாடுகளுக்கு எதிரான சட்டமான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் அரசாங்கம், எதிரிகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்துவதாக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.