ஊடகவியலாளர்களால் வைரஸ் பரவும் அபாயம்

0
සේයා - ෂෙහාන් ගුණසේකර
Ivory Agency Sri Lanka

பிராண்டிக்ஸ் கொரோனா கொத்தனி வெடிப்பு ஆரம்பித்த நாள் முதல், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் தொடர்பில் அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் ஊடாக வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் எச்சரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை இப்போது 800ஐ தாண்டியுள்ளதாக, பாதுகாப்புப் படைத் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது, கொரோனா வைரஸ் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அறிக்கையிடுவதில், வைத்தியசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிகிச்சை பெறும் இடங்களுக்குச் சென்று ஊடகவியலாளர்கள் பணியாற்றுவது ஆபத்தானது அரச தகவல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

“இந்த சூழ்நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் தொடர்புடைய ஊடக நிறுவனங்களின் பிற ஊழியர்களின் உடல்நலத்திற்கு ஏதேனும் ஆபத்து ஏற்படக்கூடும்” என அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

ஆகவே, கொரோனா தொடர்பில் அறிக்கையிடும், ஊடகவியலாளர்களுக்கு அவர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்குமாறும், சுகாதாரத் துறை வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றவும் அறிவுறுத்துமாறும், ஊடக நிறுவனங்களின் பிரதானிகளிடம் அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“குறிப்பாக, கொரோனா வைரஸுடன் தொடர்புடைய சூழலுக்கு செல்வதையும், சந்தேகத்திற்கிடமான நபருடனான தொடர்பினை பேணுவதையும் முடிந்தளவு குறைத்துக்கொள்ளுமாறும் ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குங்கள்”

தொற்றுநோய் குறித்து பொதுமக்களுக்கு தெளிவூட்டுவதில் ஊடகங்கள் அளித்த பங்களிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர், வைரஸ் பரவுவதற்கான அச்சுறுத்தலில் இருந்து இலங்கையை காப்பாற்றுவதற்கு, இதுவரை வழங்கிய பொறுப்பான பங்களிப்பை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அரச தொலைக்காட்சியான ஐடிஎன் இரண்டாவது கொரோனா அலையின் முதல் தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் வெறுக்கத்தக்க வகையில் வெளியிட்ட செய்தித் தொடர்பில், சமூக ஊடகங்களில் தொடர்ச்சியான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருவதாக அரச தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளது.

அறிக்கையிடுவதற்கான வழிகாட்டுதல்கள்

முன்னதாக ஏப்ரல் மாதத்தில், தொலைக்காட்சி அலைவரிசைகள் கொரோனா வைரஸ் மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பிலான செய்திகளை வெளியிடத் ஆரம்பித்த நிலையில், நாட்டின் தலைமை சுகாதார அதிகாரி, கொரோனா தொடர்பில் அறிக்கையிடலின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் உட்பட பல பரிந்துரைகளை அறிமுகப்படுத்தியிருந்தார்.

கொரோனா தொற்றாளர்கள், நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளை மேற்கோள் காட்டுவதில் இனம் அல்லது மதத்தை ஒருபோதும் குறிப்பிட வேண்டாம் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அறிக்கையின் ஊடாக உத்தரவிட்டிருந்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிமுகப்படுத்திய வழிகாட்டுதல்களின்படி, கொரோனா குறித்து அறிக்கையிட உண்மையான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை “நோயாளிகள்” எனக் குறிப்பிடுவதோடு, ஏனையவர்களை ”நோய் பரப்புபவர்கள்” குறிப்பிடக்கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

நோய் ஆபத்துத் தொடர்பில் விஞ்ஞானப்பூர்வமான தகவல்களை மாத்திரம் பயன்படுத்துங்கள். தனிப்பட்ட நபர்கள் மற்றும் பல்வேறு மூலங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை வெளியிடாதீர்கள்.

தனிமைப்படுத்தலுக்கு உள்ளான நபர்கள், நோயாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பிலான புகைப்படங்களை அவர்களது (குடும்பத்தினரின்) அனுமதியின்றி பயன்படுத்தாதீர்கள்.

உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பிலான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தெளிவின்றி பயன்படுத்துவது நல்லது.

பொதுமக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிட வேண்டாம்.
இவை எல்லாவற்றையும் விட, பொது மக்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணம் செய்திகளை வெளியிட வேண்டும்.

கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஊடகங்கள் அளித்த ஆதரவுக்கு சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் நன்றி தெரிவித்தார்.

Facebook Comments