அமைச்சரவையின் அனுமதியின்றி கொரோனா தொற்று நோயால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நிலத்தை வழங்குமாறு இலங்கை ஜனாதிபதி மாலைத்தீவிடம் கோரிக்கை விடுத்துள்ளமைத் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட வேண்டுகோள் விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருந்தார்.
எனினும் அரசாங்கம் அத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (15) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, “அரசாங்கம் அத்தகைய தீர்மானத்தை எடுக்கவில்லை” எனக் கூறினார்.
“ஒரு நிபுணர் குழுவின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்கிறது. இது தொடர்பாக பிரதமரோ அமைச்சரவையோ எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.”
இலங்கை ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர், இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் ரம்புக்வெல்ல, ”அமைச்சரவை பேச்சாளராக என்னைப் பொருத்தவரை, இதுபோன்ற எதுவும் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றுநோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களை தங்கள் தாயகத்தில் அடக்கம் செய்ய இலங்கை ஜனாதிபதி அனுமதிக்கவில்லை என்பதை மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.
”கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட வேண்டுகோளுக்கு அமைய, மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் அரசாங்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.” என மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய இறுதி சடங்குகளை எளிதாக்குவதற்கான சாத்தியங்கள் குறித்து மாலைத்தீவு அரசு ஆராயும் எனவும் அப்துல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
உயிரிழந்த இலங்கையர்களை அரசாங்கத்தின் தலையீட்டுடன் வேறொரு நாட்டில் அடக்கம் செய்வது மனித உரிமை மீறல் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மாலைத்தீவு அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.