கொடிய கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு இலவசமாக் கிடைத்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து கணக்காய்வு செய்ய, இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று, கணக்காய்வாளர் நாயகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கைக்கு இலவசமாக கிடைத்த மற்றும் விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து உடனடியாக கணக்காய்வு செய்ய வேண்டுமென, இலங்கை ஆசிரியர் சங்கம் மே 30 ஞாயிற்றுக்கிழமை கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மே 24 அன்று சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, இந்தியா 500,000 டோஸ் கொவிஷீல்ட் தடுப்பூசியை நன்கொடையாக வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 500,000 டோஸ் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றுக்கொண்ட ஏனைய தடுப்பூசிகளின் அளவுகள் குறித்தும் அவர் கணக்காய்வாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
“சர்வதேச தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, 264,000 டோஸ் கோவெக்ஸ், சீன அரசாங்கத்திடமிருந்து 600,000 டோஸ் சினோபார்ம் மற்றும் ரஷ்யாவிடமிருந்து 15,000 டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசியை பணத்திற்கு விற்பனை செய்தமை, பல்வேறு அரசியல் அனுசரணையில் தடுப்பூசிகளை வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு பல்வேறு முறைகேடுகள் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் நடைபெற்றுள்ளமைத் தொடர்பில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருவதாக சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் பல தொழில்முறை குழுக்கள் தமக்கு தடுப்பூசியை வழங்குமாறு, தொடர்ந்து பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள ஆசிரியர் சங்கத்தின் தலைவர், இது தொடர்பாக தாம் கோரிக்கை விடுத்த விடயத்தையும் கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
“மார்ச் மாதத்தில் சாதாரண தர பரீட்சையின்போது, பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு தடுப்பூசி போட வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொண்டோம், மேலும் பரீட்சை ஆணையாளரும் பரீட்சை கடமையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தடுப்பூசியை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார், ஆனால் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு தடுப்பூசி எதுவும் வழங்கப்படவில்லை. பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக, முதன்மையான குழு என்ற அடிப்படையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் இதுவரை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முன்னணி குழுக்களுக்கு தடுப்பூசியை வழங்காமல் தடுப்பூசியை பணத்திற்கு அல்லது பல்வேறு அரசியல் அனுசரணையின் கீழ் வழங்கியிருந்தால், இது பொது சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதாக அமையுமென, இலங்கை ஆசிரியர் சங்கம் கணக்காய்வாளர் நாயகத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளது.
மாவட்ட அடிப்படையில் முன்னுரிமை
கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ள தெரிவுசெய்யப்பட்ட உயர் ஆபத்துள்ள மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறியுள்ளார்.
இதற்கமைய, தனது வாக்காளர்கள் உள்ள மாவட்டத்திலும், பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு மே 30 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
“உலகில் தடுப்பூசி போடுவது ஒரு கடினமான பணி. ஒரு தடுப்பூசி கூட பெறாத 45 நாடுகள் உலகில் உள்ளன. இலங்கையில், தடுப்பூசிக்கு மாவட்ட முன்னுரிமை அளிக்க பல அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று இந்த மாவட்டங்களில் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, அண்மைய தொற்றாளர்களின் எண்ணிக்கை, இறப்புகளின் எண்ணிக்கை மற்றும் அப்பகுதியின் தன்மை. இவைகளை கருத்தில் கொண்டு தான் எந்த மாவட்டங்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம். அதன்படி, நாங்கள் தற்போது வழங்கும் மாவட்டங்களுக்கு மேலதிகமாக அடுத்த தடுப்பூசியை இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு வழங்குவோம். இரத்தினபுரி மாவட்டத்தில் 30ஆம் திகதி இந்த செயற்பாடு ஆரம்பமாகும்.”