கடற்படையினர் பலர் நோய்வாய்ப்படும் நிலையில், கவலைகொள்ளும் பாதுகாப்பு படையினர்

0
Ivory Agency Sri Lanka

குறுகிய காலத்தில் அதிகளவான கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை, விசேட நிபுணர்களின் அறிவுறுத்தல்களை புறக்கணித்தமையின் விளைவு என கோவிட் 19 சுகாதார போராட்ட முன்னணி, பாதுகாப்பு படையினரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

கடற்படையைச் சேர்ந்த 180 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதியான இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

ஸ்ரீலங்காவில் குறிப்பிட்ட ஒரு அமைப்புக்குள் பதிவான அதி கூடிய கொரோனா தொற்றாகவும் இது பதிவாகியுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினர், ஏன் சுகாதார நிபுணர்களின் அறிறுவுறுத்தல்களை பின்பற்றவில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொற்று நோய் ஒழிப்பு மற்றும் போர் ஆகிய வெவ்வேறான விடயங்கள் என வலியுறுத்தியுள்ள இலங்கை பொதுச் சுகாதார பரிசோதர்களின் சங்கம், விடயதங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பரிந்துரைகளை கருத்தில் எடுப்பது மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.

நாம் பதுங்கியிருந்தோ அல்லது கண்ணுக்கு தெரியும் எதிரியுடனோ போராவில்லை, மாறாக கண்ணுக்கு தெரியாத எதிரியுடனேயே போராடுகின்றோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யூ.ரோஹண இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இதுபோன்ற சூழ்நிலை கையாளக் கூடிய அறிவும் அனுபவமும் உள்ள அதிகாரிகளின் பரிந்துரைகளை கருத்தில் எடுத்து, இனம் மற்றும் மதத்தை தாண்டி பொதுவான எதிரியை தோற்கடிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்பதை நினைவூட்டுவது எமது கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடையாளம் காணப்பட்ட பின்வரும் சிறப்பம்சங்கள் குறித்து தத்தமது நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளதா எனவும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போது முகாம்களுக்கு அழைக்கப்பட்டுள்ள படையினர்கள், அவர்கள் தனிப்பட்ட சமூக இடைவெளியை பேணியவாறு பயணிக்க கூடிய போக்குவரத்து வசதிகள் உள்ளதா?

அல்லது அதே வாகனத்தை மீண்டும் பயன்படுத்தும் போது தொற்று ஏற்பட்டவர் பயணித்திருந்தால் வாகனத்தில் செல்வோருக்கும் முகாமில் இருப்பவர்களுக்கும் ஆபத்து ஏற்படாதா?

தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், தெரிந்தோ அல்லது தெரியாமலோ குடும்பத்தினருடன் வசித்தால் அவர்கள் சென்ற பின்னர் கூட்டு தனிமைப்படுத்தல் நிறுத்தப்படுமா? அவர்கள் சாதாரண சமூகத்துடன் இணைய முடியுமா?

தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ளவது தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயற்படாக அமையாதா?

பரிசோதனைகள் மூலம் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரிகளுடன், கொரோனா சந்தேகநபர்களை மீண்டும் இணைப்பதால், அவர்களுக்கு ஆபத்து ஏற்படாதா?

வீட்டில் இருந்து பணிக்கு அழைக்கப்பட்ட ஒருவர் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்தால், அவருடன் நெருங்கிப் பழகிய அனைவரும் அழைக்கப்படுவார்களா?

அவ்வாறு நெருக்கிப் பழகியவர்களை யார் பராமரிப்பார்கள்?

தற்போதுள்ள வசதிகளுக்கு ஏற்ப கொண்டு செல்லப்படுவோர் எத்தனை நாட்களுக்கு பரிசோதனை செய்ய முடியும்?

தற்போது முதலாம் நிலை தொடர்புகளைப் பேணிய பலர் அடையாளம் காணப்பட்ட கிராமங்களை அண்மித்த திகதியில் சாதாரண சமூகத்திற்கு திறந்துவிடுவது பிரச்சினையாக இருக்காதா?

இந்த செயன்முறைகளில் முறையான தொழிற்நுட்ப நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை பொதுச் சுகாதார பரிசோதர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தொற்றுநோய் ஒழிப்பு தொடர்பில் பொறுப்பளிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு சம்பந்தப்பட்ட விடயத்தில் அறிவும் பயிற்சியும் இருக்காமை, இவ்வாறான பாரிய அனர்தத்திற்கு வித்திடும் என அரசாங்க தாதியர்கள் சங்கம் மற்றும் தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவரான சமன் ரத்னப்ரிய கூறியுள்ளார்.

எஜமான்கள் பின்பற்றாத விதிகள்

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் விடயத்தில் சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்களை அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களும் நிராகரித்து செயற்படுவதாக இலங்கை பொதுசுகாதாரத்தில் பணியாற்றும் முன்னணி நிபுணர்கள் குழு அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தது.

சுகாதார அதிகாரிகளால் முன்மொழியப்பட்ட வழிகாட்டல்களை உயர்மட்டத்திலுள்ள தரப்பினரும் அடிமட்டத்திலுள்ள அதிகாரிகளும் பின்பற்றாத பல சந்தர்ப்பங்கள் இருந்ததாக ஸ்ரீலங்காவின் சமூக மருத்துவ விசேட நிபுணர்களின் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதில் தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் பிரச்சினைகளை தாம் அவதானிப்பதாக தெரிவித்துள்ள அந்த சங்கம், கோவிட் 19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையிலான மூலோபய திட்டங்களையும் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் விடுமுறையில் இருக்கும் முப்படையினரும் பணிகளுக்கு திருப்புவதை இலகுவாக்குவதை நோக்காக கொண்டு, இராணுவ முகாமங்களில் சுகாதாரத்தை உறுதிசெய்யும் பொருட்டு மேல் மாகாண ஆளுநர் ஏயார் சீப் மாஷல் ரொஷான் குணத்திலக தலைமையில் விசேட ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Facebook Comments