சாரதிகளின் தனிப்பட்ட தகவல்களை இராணுவத்திடம் கையளிக்க திட்டம்

0
Ivory Agency Sri Lanka

சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்புப் படையினரிடம் கையளிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமும் தனியார் நிறுவனத்திடம் காணப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட தரவுகளை இராணுவத்தினரிடம் வழங்கும் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, பாதுகாப்புச் செயலாளர் கொரோனா தொற்றுடன் தொடர்புடைய அனைத்து மக்களின் தரவுகளும் அவரது கையடக்கத் தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்காலத்தில் சாரதி அனுமதி பத்திரங்களை இராணுவத்தினர் ஊடாக வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட அமைச்சர், மிகக் குறைந்த செலவில் சாரதி அனுமதி பத்திரத்தை வழங்கவும், இதுவரை நாட்டிற்கு இல்லாமல் போன, பெருந்தொகை பணத்தை சேமிக்கவும், ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானதமாக காணப்பட்ட தகவல் அமைப்பை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கவும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தின்போது, எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களை இராணுவத்தினர் ஊடாக விநியோகிப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த செயன்முறையை ஒருங்கிணைக்க அமைச்சர் மஹிந்த அமரவீர, இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சை உள்ளடக்கிய ஒரு குழுவை நியமித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொடுக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டதோடு, அவ்வாறு சாரதி அனுமதி பத்திரத்தை பெற 1,340 ரூபா என்ற தொகை பணம் செலவிடப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலின் போது, மிகக் குறைந்த செலவில் சாரதி அனுமதிப் பத்திரத்தை தயாரிக்க முடியும் எனவும், இதற்கு 1,340 ரூபாயை செலவிடுவது வீண்விரயம் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்க இலங்கை இராணுவம் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது தெரிவித்துள்ளார்.

Facebook Comments