அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கோரி பெண்கள் நீண்ட நடைபயணம்

0
Ivory Agency Sri Lanka

அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் அடைந்துள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமையை அளிக்க வேண்டும் எனக் கோரி ஏராளமான பெண்கள் நீண்ட நடை பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

தமது நாட்டிற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டால், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக் கோரி அவுஸ்திரேலியாவின் தஞ்சமடைந்துள்ளோர், அங்கு தமக்கு நிரந்தரமாக வசிக்கும் உரிமை வேண்டும் எனக் கோரி போராடி வருகின்றனர்.

அவர்கள் அகதிகளாக இருந்தாலும், நிரந்தர குடியுரிமை விடயத்தில் அவுஸ்திரேலிய அரசு தம்மை
தொடர்ந்தும் ஒரு ஸ்திரமற்ற நிலையிலேயே வைத்துள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

தமக்கு நிரந்தரமாக அவுஸ்திரேலியாவில் நிரந்திரமாக தங்கியிருக்க அனுமதி அளிக்கபப்ட வேண்டுமென, அவர்கள் மெல்பர்ன் நகரிலிருந்து நாட்டின் தலைநகர் கன்பரா வரையிலான 650 கிலோமீற்றர் தூரத்திற்கு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் நடந்து செல்லும் பயணத்தை கடந்த வெள்ளிக்கிழமை (22) ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் 12,000 பேர் ஸ்திரமற்ற நிலையில், அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழலில், ‘விரைவாக முடிவெடுக்கும்’ நடைமுறை பிழையானதாக உள்ள என அவர்கள் கூறுகின்றனர்.

மகளிரால் மட்டுமே முன்னெடுக்கப்படும் இந்த போராட்டம், கடந்த வெள்ளிக்கிழமை குடிவரவு, குடியேற்றம், குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அண்டூர் ஜைல்ஸ்ஸின் அலுவலகத்தின் முன்றலில் இருந்து ஆரம்பமானது.

மிகவும் வலுவாக தமது ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான இந்த பேரணியில், அகதி தஞ்சம் கோரியுள்ள பல்வேறு சமூகத்தினர் இணைந்துள்ளனர். அவர்கள் அவுஸ்திரேலிய ஜனநாயகத்தின் தலைமையிடமான நாடாளுமன்றம் அமைந்துள்ள கன்பெரா நகரை நோக்கி பயணிக்கின்றனர்.

இந்த நடை பயணத்தை முன்னெடுத்துள்ள அமைப்பானது அவுஸ்திரேலிய அரசின் ‘ விரைவாக முடிவெடுக்கும்’ பொறிமுறையானது வெளிப்படைத்தன்மை மற்றும் குடிவரவு தொடர்பிலான மதிப்பீடுகள் குறித்து தீவிரமான கவலைகளை எழுப்புகிறது எனக் கூறியுள்ளது. “ அவர்களின் வாழ்க்கை மிக நீண்டகாலமாக ஊசலாடுகிறது” என அந்த அமைப்பினர் கூறுகின்றனர்.

இதேவேளை நாட்டை ஆளும் தொழிற்கட்சியைச் சேர்ந்த பிரதமர் அண்டனி அலபனீஸும் இந்த நெடும் பயணத்தை முன்னெடுத்துள்ள மகளிரின் விமர்சனத்திலிருந்து தப்பவில்லை.

“நௌரு மற்றுன் பபுவா நியூகினியிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு கொண்டுவரப்பட்ட அகதிகளும் இதே ஸ்திரமற்ற சூழலை எதிர்கொள்கின்றனர். அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க தொழிற்கட்சி உறுதியளித்தாலும் அம்மக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. ஸ்திரத்தன்மையற்ற ஒரு சூழலிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது”.

தமது நடை பயணத்தின் போது கருணை, நேர்மை, நியாயம், நீதி ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகத்தினரின் பார்வையை தங்களால் இழுக்க முடியும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். அவர்களின் குரல் மூலம் அவுஸ்திரேலிய அரசு ஸ்திரமற்ற எதிர்காலம் தொடர்பில் கவலை கொண்டுள்ள இந்த அகதிகள் விடயத்தில் உரிய கவனம் செலுத்தி அந்நிலைக்கு நல்லதொரு தீர்மானத்தை எடுக்க அழுத்தம் கொடுப்பார்கள் என நம்புகின்றனர்.

“நாங்கள் அகதி தஞ்சம் பெற்றுள்ளவர்கள், அகதி தஞ்சம் கோரியுள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நீதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரமற்ற நிலையை மாற்ற வேண்டும் என நாங்கள் கோருகிறோம். யாரும் பின் தங்கி விடுபட்டுவிடக் கூடாது மேலும் தஞ்சம் கோருபவர்கள் அனைவரது உரிமைகளும் அங்கீகரிக்கபப்ட்டு ஏற்கப்பட வேண்டும். இதில் அவர்களது குழந்தைகளின் கல்வி கற்றலின் உரிமை மற்றும் வளர்ந்தவர்கள் வேலை செய்யும் உரிமையும் அடங்கும்”.

விக்டோரியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ‘சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் தொழிற்சங்கம்’, இந்த நீண்ட பயணம் மற்றும் அவர்களது கோரிக்கையை தாங்கள் ஆதரிப்பதாகவும் அதில் பெருமை கொள்வதாகவும் கூறியுள்ளது.

Facebook Comments