சிறுவர் துஷ்பிரயோக சந்தேகத்தில் ஆசிரியர் கைது

0
Ivory Agency Sri Lanka

பாடசாலை மாணவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கைது செய்துள்ளது.

கணிதப்பாடத்தை கற்பிக்கும் போர்வையில் தனது வீட்டிற்கு வந்த ஆசிரியரால் 12 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக ஓகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புலனாய்வு பிரிவு குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன், 2018இல் நடந்த சம்பவம் குறித்து தனது நண்பரிடம் கூறியுள்ளார். இதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறுவனும் அவரது பெற்றோரும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதிதா விதானபதிரண வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பான பெற்றோரிடமிருந்தும் சிறுவனிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவனின் தந்தை பல்கலைக்கழக விரிவுரையாளராக உள்ளார், மேலும் அவர் தனது பிள்ளைக்கு கணிதப்பாட ஆசிரியர் தேவை என்று நெருங்கிய நண்பருக்கு தெரிவித்துள்ளதோடு, அந்த நண்பர் ஊடாக சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் தொடர்பு கிடைத்துள்ளது.

குறித்த சிறுவனின் அறையை பெற்றோர் கல்வி நடவடிக்கைகாக தயார் செய்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆரம்ப நாட்களில், இந்த அறையின் அனைத்து கதவுகளும் ஜன்னல்களும் திறந்த நிலையில் வைக்கப்பட்டன, பின்னர் அறையின் அனைத்து கதவுகளும் யன்னல்களும் படிப்படியாக மூடப்பட்டு கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் படிப்படியாக சிறுவனுடன் நெருக்கமாகியுள்ளதோடு, பின்னர் குழந்தையை உடலுறவு கொள்ள தூண்டியுள்ளதாக, பேராசிரியர் முதிதா விதானபதிரண வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிறுவனுக்கு தயக்கம் இருந்தபோதிலும், ஆசிரியர் மீண்டும் மீண்டும் ஆபாச காணொளிகளை காட்டியுள்ளதோடு, சிறுவனை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்”

ஒரு நாள் தனது தயார் ஆசிரியருக்கு தேநீர் கொண்டு வந்தபோது ஆசிரியர் உடலுறவு கொண்டிருந்ததாகவும், எனினும் தாய் அதனை அவதானிக்கவில்லை எனவும் குறித்த சிறுவன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நேரத்தில் குழந்தையின் தாயும் பாட்டியும் வீட்டில் இருந்துள்ளனர்.

ஆசிரியர் அச்சுறுத்தல்கள்

தந்தை தேடித்தந்த ஆசிரியர் என்பதாலும், மீண்டும் ஒரு ஆசிரியரை கண்டறிய முடியாது என்ற காரணத்தினாலும் பின்னர் ஆசிரியர் சிறுவனை அச்சுறுத்தியதாலும், இதுத் தொடர்பில் தான் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதிதா விதானபதிரண, பிரதித் தலைவர், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அலஹபெருமா, பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன ஆகியோரின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிறப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் அறையில் கல்வி கற்பிப்பதற்கான வாய்ப்பை பெற்றோரே வழங்குகிறார்கள், இது பெரியவர்கள் கவனம் செலுத்தாத ஒரு பகுதியாகும், மேலும் அறையில் உள்ள அனைத்து கதவுகளையும் யன்னல்களையும் மூடிவிட்டு கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறுவது தொடர்பில் ஆராய வேண்டும். துஷ்பிரயோகம் நிகழும் ஒவ்வொரு முறையும் குழந்தை தனது தாய் மற்றும் பாட்டி வீட்டில் இருந்துள்ளனர். பெற்றோர் இதுபோன்ற விடயங்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும் என, ஏனெனில் இது குறித்து பெற்றோர் அதிக அக்கறை கொண்டிருந்தால் இந்த துஷ்பிரயோகத்திலிருந்து சிறுவனை காப்பாற்றியிருக்க முடியும் என, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதிதா விதானபதிரண தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் 550,000 முறைப்பாடுகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித இலக்கத்திற்கு வருடாந்தம், 550,000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைப்பதாக தெரியவந்துள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 2015 முதல் 2019 வரை 47,177 முறைப்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், தொலைக்காட்சி சிறுவர் நிகழ்ச்சி வடிவமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த தகவலும் வெளியாகியுள்ளது.

2019 புள்ளிவிபரங்களின்படி, இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை 5,292 எனவும் அவர் தெரிவித்தார்.

அரச கணக்காய்வாளர் நாயகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் பாதுகாப்பு பிரிவிற்கு கடந்த ஒன்பது வருடங்களில் 48,361 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றில், 413 வழக்குகள் மாத்திரமே விசாரிக்கப்பட்டு சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, இதில் 185 வழக்குகள் மாத்திரமே உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“கடந்த ஏழு ஆண்டுகளில் சிறுவர் துஷ்பிரயோகம், மற்றும் சிறுவர்களுக்கு காயம் ஏற்படுத்தல் போன்ற சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தாலும், அவற்றை தடுக்கும் வகையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உயர் மட்டம், மாவட்ட/உள்ளூர் சிறுவர் பராமரிப்பு/மாவட்ட உளவியல் அதிகாரிகளை முறையாக வழிநடத்த நடவடிக்கை எடுக்கவில்லை” என அரச கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெறப்பட்ட ஆயிரக்கணக்கான முறைப்பாடுகளில் எத்தனை விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளன என்பதை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.

Facebook Comments