கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டுமென, நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
பரீட்சை நிலையங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மாணவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
கம்பஹா மற்றும் கொழும்பில் அமைந்துள்ள பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் பட்சத்தில், இது பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அதிபர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துமென ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், பரீட்சை ஆணையாளர் அறிவித்ததுபோல் பொதுப் போக்குவரத்து சேவைகள் செயற்படவில்லை எனவும், பரீட்சைக் கடமைகளில் உள்ள அதிகாரிகள் தங்கள் சொந்த செலவில் போக்குவரத்து வசதிகளை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளததாகவும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கு பெற்றோர்களும் போக்குவரத்திற்காக பெருந்தொகை பணத்தை செலவிட வேண்டியுள்ளதோடு, அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“குறிப்பாக ஒக்டோபர் 31 ஆம் திகதி ஏராளமாக மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். கணக்கியல் பரீட்சை அன்று இடம்பெற்றது. எனினும் ஊரடங்கு உத்தரவால் மேல் மாகாணத்தில், மாணவர்கள் மற்றும் பரீட்சைக் கடமைகளில் உள்ள அதிகாரிகள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கினர்.
நாட்டில் நிலவும் ஆபத்தான சூழ்நிலை காரணமாக பரீட்சைக் கடமைகளில் உள்ள அதிகாரிகளுக்கு பயணக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் பலமுறை கோரியுள்ளது. ஊரடங்கு உத்தரவுப் பகுதிகளில் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பயணக் கொடுப்பனவு வழங்குவது குறித்து பரீட்சை ஆணையாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். எனினும் பின்னர் அதனை குறுந்தகவல் ஊடாக திருத்தியுள்ளார்.”
இலங்கை ஆசிரியர் சங்கம் ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிட்ட அறிக்கையில், கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக பரீட்சை ஆணையாளர் முறையான சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மாணவர்களுடன் அதிகாரிகள் இணைந்து பணியாற்றுவதால், அவர்களும் நோயால் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தில் உள்ளதாக, சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரும், ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.
தனியார் பி.சி.ஆர்
தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட மாணவர்களுடன் இணைந்து பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், எனினும் அதற்கான எந்த திட்டமும் இல்லை.
இல்லையெனவும் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் குற்றம் சாட்டுகிறார்.
“இந்த சூழ்நிலையில், அவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகளை 9,500 ரூபாய் செலவில் மேற்கொள்ள வேண்டும்.”
உயர்தரப் பரீட்சை நவம்பர் 06 வரை நடைபெறும். இந்த சூழ்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட மாணவர்களுடன் கடமையில் உள்ள அதிகாரிகளின் பி.சி.ஆர் சோதனைகளுக்கு செலவிட்ட பணத்தை மீளச் செலுத்துவது மற்றும் யாராவது ஒரு அதிகாரி பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள விரும்பினால் அத்தகைய அதிகாரிகள் சார்பாக அதனை விரைவாக நடத்துவது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் தெளிவான திட்டமிடலை வெளியிட வேண்டும் எனவும், இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.