தொற்று நோய்க்குள்ளான தாதியர்களை கழிவறை சுத்தம் செய்ய அறிவுறுத்தல் (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

இரண்டு முறை கொரோனா தொற்று அலையை எதிர்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் முன்னணின்று செயற்படும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தத் தவறியுள்ள நிலையில், அவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாதியர்களுக்குத் தேவையான வசதிகளையும் உணவுகளையும் வழங்குவதற்கு பதிலாக, கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் அவர்கள் அமர்த்தப்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

“நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில், நோயாளர் விடுதியில் உள்ள ஏனைய நோயாளிகளுடன் இணைந்து கழிவறைகளை கழுவும்படி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

டிசம்பர் 22 செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசு தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய இந்த தகவலை வெளியிட்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளான தாதியர்கள் கழிவறைகளைக் சுத்தம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது, , இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அரச தாதியர் சங்கத்தின் தலைவர், எவ்வாறெனினும் அதன் பின்னர் இரண்டு தாதியர்களை அந்த வைத்தியசாலையில் இருந்து வேறு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால் இன்னும் இரண்டு தாதியர்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர். நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பின்னர் ஒருவர் மாற்றப்பட்டார். இன்னும் ஒருவர் அந்த வைத்திசாலையில் இருக்கின்றார்.”

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதார ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும் என அரச தாதியர் சங்கத் தலைவர் சமன் ரத்னபிரியா அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். சுகாதார ஊழியர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அரச தாதியர் சங்க குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments