எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விடயத்தில், மீன்பிடி சமூகத்தினரிடையே மோதல்களை அரசாங்கம் உருவாக்குவதாக நாட்டின் முன்னணி மீனவர் சங்கத் தலைவர்களில் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பிரிவினை நடவடிக்கையில் நாட்டின் மிக உயர்ந்த கத்தோலிக்க தலைமையும் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அரசாங்கம் மிகவும் நியாயமற்ற ஒரு திட்டத்தை செயற்படுத்துவதோடு, மீன்பிடி சமூகத்தின் முதுகெலும்புகளை உடைக்கிறது, மீன்பிடி சமூகத்தில் மோதல்களையும் பிளவுகளையும் உருவாக்குகிறது.” என அகில இலங்கை மீனவர் தொழிற்சங்கத்தின் தலைவர் அருண ரொஷாந்த தெரிவித்துள்ளார்.
ஜூலை 28 புதன்கிழமை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்த பின்னர், அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதத்தால், இலங்கை அரசு இதுவரை பெற்றுள்ள 7,200 மில்லியனில், மீன்பிடி சமூகத்திற்காக 4,200 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக, தொழிற்சங்கத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தீர்மானிக்கும் குழுவில் மீனவர்களை சேர்க்காமை குறித்து கவலை வெளியிட்டுள்ள அருண ரொஷாந்த, மீனபிடி முறைமையை அடிப்படையாகக் கொண்டு, நியாயமற்ற வகையில் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தெப்பத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு பத்து நாட்களுக்கு பதினைந்தாயிரம், விசைப் படகுகளுக்கு எண்பதாயிரம். அந்த மீனவனுக்கும் இந்த மீனவனுக்கும் என்ன வித்தியாசம்? என நாங்கள் கேட்கின்றோம்”
மீனவர்களுக்கு தமது தொழில்களை இழந்தமைக்காக இழப்பீடு வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அருண ரொஷாந்த, பெரிய அல்லது சிறிய மீனவர்கள் என யாரும் இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
“இந்த நபர்கள் இப்படி எவ்வாறு இழப்பீடு வழங்க முடியும்? இதுபோன்று எங்கள் வாழ்க்கையைப் பற்றி தீர்மானங்களை எடுக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. எனவே, இந்த தவறை அரசாங்கம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்.”
ஆட்சியாளர் மற்றும் மதத்தலைவர்
அரசாங்கம் மற்றும் பேராயரின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுக்களால் இழப்பீடு வழங்கப்படுவதாக, அருண ரொஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
“நீர்கொழும்பு மாவட்ட மீன்வள அமைப்பு. இது ஒரு அரச அமைப்பு. கம்பஹா மாவட்டத் தலைவர் ஒரு மீனவர் அல்ல. மேலும், இதன் முக்கிய தலைவர் மீன்வளத்துறை அமைச்சர். ”
சிங்கப்பூர் நிறுவனத்திற்குச் சொந்தமான எக்ஸ்பிரஸ் பேர்ள் கடந்த ஜூன் மாதம் கொழும்பு கடலில் நங்கூரமிட்ட நிலையில் தீக்கிரையானது.
இந்த நிலையில் அன்றைய தினம், நீர்கொழும்பு பிரஜைகள் கூட்டணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மனித உயிர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்கள், நீர்வாழ் தாவரங்கள் என அனைத்திற்கும் தீங்கு விளைவிக்கும் அமிலங்கள், இரசாயனங்கள் மற்றும் தீக்கிரையான பொருட்களின் பகுதிகள் கடலில் கலந்துள்ளமையால், விபரிக்க முடியாத சுற்றுச்சூழல் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
கப்பல் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 16 கிலோமீற்றர் சுற்றளவு பிரதேசம், நீர்கொழும்பில் இருந்து கொச்சிக்கடை வரை 6 கிலோமீற்றர் தூரம் மற்றும் பாணந்துறை வரை 2 கிலோமீற்றர் தூரம் தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, அது இன்னமும் நடைமுறையில் உள்ள நிலையில், பல சந்தர்பங்களில் ”கடற்படை சில இடங்களில் மீனவர்களை வெளியேற்றும் செயற்பாடுகளை மேற்கொள்கிறது” என மீனவர் சங்கத் தலைவர் அருண ரொசாந்த தெரிவித்துள்ளார்.