தடுப்பூசி குறித்து நம்பிக்கையிழ்ந்த மக்கள் தவறு நிகழ்ந்தது எங்கே?

0
Ivory Agency Sri Lanka

”ஒவ்வொருத்தங்கள் ஒவ்வொரு பிரச்சினையை சொல்றாங்க, அந்த பயத்துலயே நான் போட்டுகல, எனக்கு கால் வருத்தம் இருக்கு. அது வேற பயம்.” என்கிறார் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர். ”எனக்கு கடவுள் நம்பிக்க இருக்கு. ஊசி மீது நம்பிக்க இல்ல. பலர் போனாங்க. எனக்கு போட்டுக்கொள்றதுல நம்பிக்கையும் இல்ல. எங்கள் குடும்பத்துல யாரும் போட்டுக்கல.” மோதர பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

”ஊசிக்கு எங்கட நாட்டு சுகாதார அதிகாரிகள் அனுமதி வழங்கல. உலக சுகாதார நிறுவனமும் அனுமதி வழங்கலனு சொல்றாங்க. ஆக நம்பிக்கையோட எப்டி போடுறது.” என்கிறார் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஒருவர்.

இவர்கள் ஒரு சில உதாரணங்களேத் தவிர, இன்னும் எத்தனையோ ஆயிரம் பேர் இலங்கையில் இவ்வாறு கொரோனா தடுப்பூசி குறித்த ஒரு தவறான புரிதலுடன் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

இலங்கையில் தடுப்பூசி

உலகளவில் பரவிய கொரோனா தொற்று இலங்கையையும் விட்டு வைக்காத நிலையில், தொற்று பரவ ஆரம்பித்து ஒரு வருடத்தின் பின்னர் தடுப்பூசியை வழங்குவது குறித்து உலக நாடுகள் அவதானம் செலுத்தியுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரையில், ஜனவரி மாதம் 29ஆம் திகதி தொடக்கம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இலங்கைக்கு மொத்தமாக 12 இலட்சத்து 64 ஆயிரம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி நாட்டிற்கு கிடைத்துள்ளதுடன், அவற்றில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 தடுப்பூசிகள் சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பு உள்ளிட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்டதோடு, ஏற்கனவே இறக்குமதி செய்து எஞ்சியுள்ள 2 இலட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகளை, இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பவர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, சீன அரசாங்கத்தின் நன்கொடையாக 6 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகளை முதலில் இங்கு வசிக்கும் சீன பிரஜைகளுக்கு ஏற்ற தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய இதுவரை இரண்டாயிரத்து 469 தடுப்பூசிகள் (முதல் டோஸ்) நாட்டில் வாழும் சீனப் பிரஜைகளுக்கு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் 13 இலட்சம் ”ஸ்புட்னிக் V” தடுப்பூசிகளை ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

தடுப்பூசியும் அச்சமும்

இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தில் இவ்வாறான ஒரு நிலைமை காணப்படுகின்ற நிலையில், பொது மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையீனம் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த உறுதிப்படுத்தப்படாத கருத்துக்கள் சமூக வலைத்தளங்களிலும், வாய்மொழி மூலமாகவும் பரவுகின்றமை இதற்கு மிக முக்கிய காரணம் எனலாம், அதனைவிட பக்கவிளைவுகள் குறித்த சில தகவல்கள் உண்மை என்ற வகையில் சுகாதார தரப்பினரும் கருத்து வெளியிடுகின்ற நிலையில் பொது மக்கள் மத்தியில் இந்த அச்சமும், சந்தேகமும் மேலும் தீவிரமடைந்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் என்னக் கூறுகிறது?

”ஒவ்வொரு தடுப்பூசி மருந்தும் மிதமான சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தடுப்பூசி உங்களுக்கு இடப்பட்ட இடத்தில் சிறிது வலி ஏற்படலா், சிவந்துபோதல் அல்லது வீக்கம், தலைவலி அல்லது இலேசான காய்ச்சல் ஆகியன தடுப்பூசிகளினால் ஏற்படும் பிரதானமான பக்க விளைவுகளாகும். இவற்றில் பெரும்பாலானவற்றை மிதமான சில வலி நிவாரணிகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம், மற்றும் இவை அச்சப்படுவதற்கான காரணங்கள் அல்ல.” என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, இலங்கையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ள விடயத்தை உலக சுகாதார ஸ்தாபனம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இந்தியாவின் சீரம் (Serum) நிறுவனம் மற்றும் எஸ்.கே பயோ (SKBio) ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டிற்கான அனுமதியயை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

அனைத்து கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும் வகையில் கடுமையான பாதுகாப்புகள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய ஔடத நிறுவனங்களிடமிருந்து அனுமதியைப் பெறுவதற்கு முன்னர், கொரோனா தடுப்பூசிகள் வைத்திய பரிசோதனைகளில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, அவை பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்காக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைகளை பூர்த்தி செய்கின்றன என்பதை நிரூபிக்க வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. ஏனைய தடுப்பூசிகளையும் போலவே, கொரோனா தடுப்பூசிகளின் பயன்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், அவற்றைப் பெற்றுக்கொள்ளும் அனைவருக்கும் அவை பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தப்படும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த அடிப்படையிலேயே உலக சுகாதார ஸ்தாபனம் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சின் நிலைப்பாடு

எனினும் இலங்கையில் சிலர் உயிரிழந்த விடயத்தை சுகாதார அமைச்சரே ஏற்றுக்கொண்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டும் பலர், தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் தாமும் உயிரிழக்க நேரிடுமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதேவேளை, ”கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டால் மலட்டுத்தன்மை அதிகரிக்கும், கருத்தரிக்கும் தன்மை குறையும் எனக் குறிப்பிடுகின்றார்கள்” என பிரபல ஊடக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவர்களில் மூன்று பேர் இரத்த உறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார். எனினும் அவர்களின் மரணத்திற்கு தடுப்பூசி மாத்திரம் காரணமல்லவென்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஸ்ட்ராசெனகா தடுப்பூசியினால் இரத்தம் உறைதல் தொடர்பாக சில நாடுகள் அச்சத்தை வெளியிடப்பட்டுள்ள போதிலும், உலக சுகாதார ஸ்தாபனம் அதனையே பரிந்துரைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி செலுத்தப்படும் ஒரு மில்லியன் பேரில் 4-5 பேர் இரத்தம் உறைவினால் உயிரிழப்பதை தவிர்க்க முடியாது என்பதை உலக சுகாதார ஸ்தாபனமே சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

குழந்தையைப் பெற எதிர்பார்க்கும் பெண்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதை ஒத்திவைக்க வேண்டிய எதுவித அவசியமில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தற்போதைய தரவுகளுக்கு அமைய கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தாக்கத்தால் அதிக பாதிப்பை எதிர்நோக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், கொரொனா நோயினால் பீடிக்கப்பட்டால் முதிராக் குழந்தைகளின் பிறப்புகளுக்கு அது வழிவகுக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவது நல்லது என அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறெனினும் கர்ப்பமாக இருந்தால், கர்ப்பமாக இருக்கக்கூடும் என எண்ணினால் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் வைத்திய ஆலோசனைக்கு அமைய தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

சர்வதேச நிறுவனங்களின் நிலைப்பாடு

மிகக் கடுமையான பக்க விளைவுகள் என எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், மிகவும் அரிதாக இரத்தம் உறைதல் ஏற்படலாம் எனவும் ஐரோப்பிய மருந்து முகவர் (European Medicines Agency – EMA) நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட சுமார் 23 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 52.6 வீதமானோருக்கு தலைவலியும், 53.1 வீதமானவர்களுக்கு உடல் சோர்வும், 44 அல்லது 26 வீதமானவர்களுக்கு தசை அல்லது மூட்டு வலியும், 33.6 வீதமானவர்களுக்கு காய்ச்சலும், 31.9 வீதமானவர்களுக்கு உடல் குளிர்வது போன்ற தன்மையும், 21.9 வீதமானவர்களுக்கு வாந்தி வருவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

தடுப்பூசி பெறும் ஒவ்வொரு ஒரு மில்லியன் மக்களில் 4 முதல் 10 பேர் வரை சில பாரதூரமான பக்க விளைவை எதிர்கொள்ள நேரிடும் அவர்களில், ஒருவர் உயிரிழக்கக்கூடும் எனினும் எனினும் இது மிகவும் அரிதான ஒரு விடயம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

மூச்சுத் திணறல், மார்பு அல்லது வயிற்று வலி, ஒரு காலில் வீக்கம் அல்லது குளிர்
கடுமையான தலைவலி, மங்கலான பார்வை, காயம் ஏதும் இல்லாத தோலின் கீழ் தொடர்ந்து இரத்தப்போக்கு, சிவப்பு அல்லது ஊதா நிற புள்ளிகள் அல்லது தோலின் கீழ் இரத்தக் கொப்புளங்கள் போன்ற மிக அரிதான பக்க விளைவுகள் ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியரின் உதவியை நாட வேண்டும் எனவும், எனினும் இது மிகவும் அரிதானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் பின்னர் தொற்று

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றுகின்ற ஐந்து தாதியர்களுக்கு கொரோனா தொற்று அடையாளங் காணப்பட்டதை சுட்டிக்காட்டிய வெள்ளவத்தையைச் சேர்ந்த ஒருவர் அந்த தாதியர்கள் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றிருந்ததாகவும், ஆகவே தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவதில் என்ன பிரயோசனம் எனவும் கேள்வி எழுப்பினார்.

”உண்மையில் தடுப்பூசி ஊடாக, வைரஸ் எதிர்காலத்தில் உடலில் நுழைந்தால் அதை எளிதில் அடையாளங் கண்டு அழிக்கும் நோயெதிர்ப்புக் கட்டமைப்பின் திறனை மேம்படுத்துவதாகும்.
இத்தடுப்பூசியில் அடங்கியிருப்பது ChAdOx1 எனப்படும் வைரஸ் மூலக்கூறாகும். இது மனிதர்களில் எவ்வித நோய்த் தன்மையையும் ஏற்படுத்தாது என்பதுடன், இங்கு அடங்கியுள்ள மரபணு குறித்த பகுதி மூலம் வழங்கப்படும் சமிக்கைக்கு ஏற்ப கொரோனா வைரஸை அடையாளம் காணக்கூடிய குறித்த புரதத்தின் ஒரு பகுதி நம் உடலினுள் உருவாக்கும். அத்துடன் அதேநேரத்தில், நமது நோயெதிர்ப்புக் கட்டமைப்பு இந்த spike protein கூறுகளை அடையாளம் காணவும் அழிக்கவும் ஆரம்பிக்கிறது. புரதக் கூறுகளின் இத் தடுப்பு நடவடிக்கையானது, spike proteinற்கு எதிராக எமது நோயெதிர்ப்புக் கட்டமைப்பினால் புதிதாக உருவாக்கப்பட்ட விசேட பிறபொருளெதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.” என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது.

இது முறையாக இடம்பெற 2-3 வாரங்களாவது செல்லும் ஆகவேதான் கொரோனா தடுப்பூசிப் பெற்றுக்கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என அந்தப் பணியகம் விளக்கமளிக்கிறது. மேலும், இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பின்னர், இச்செயல்முறை மீண்டும் செயற்படுத்தப்பட்டு எமது உடலில் அதிகளவில் பிறபொருளெதிரிகள் உருவாக்கப்படுகின்றன. இது உடலில் கொரோனா வைரஸிற்கு எதிராக ஆயுதக் களஞ்சியத்தை அமைப்பது போன்றதாகும்.” என அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.

சுகாதார அமைச்சின் அலட்சியம்

தடுப்பூசி ஒன்றை பெற்றுக்கொள்ளும்போது பக்கவிளைகள் ஏற்படுவது வழமையே எனினும், இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் மக்கள் உடல்நல விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தவில்லை, அவ்வாறு செலுத்தியிருந்தால் மக்களுக்கு இவ்வாாறான அவநம்பிக்கைகள் ஏற்பட்டிருக்காது என்கிறார், வைத்திய ஆய்வக அறிவியல் கல்லூரியின் தலைவரும், விசேட வைத்திய நிபுணருமான ரவி குமுதேஷ். ”தடுப்பூசி ஒன்றை பெற்றுக்கொள்ளும்போது சில பக்க விளைவுகள் ஏற்படுவது வழமையே. எனினும் இதுத் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அது உறுதிப்படுத்தப்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னரான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுத் தொடர்பில் ஆராய்வதற்கு தனியான குழுக்களை அமைக்க வேண்டும். தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் தகவல்களை திரட்டி ஆராய வேண்டும். சுகாதார அமைச்சு இந்த பணியை மேற்கொள்ள வேண்டும். பக்க விளைவுகள் குறித்த தகவல்கள் மருந்துசாலைகளில் வைத்தியர்கள் ஊடாகவே பதிவாகிறது. அவர்களிடம் இருந்து தகவல்களைப் பெற சரியான வேலைத்திட்டமொன்று இல்லை.” என்கிறார் அவர்.

மேலும், இலங்கையில் ”இலங்கையில் தடுப்பூசி நிபுணர்கள் என யாரும் இல்லை.” என்ற உண்மையையும் அவர் அம்பலப்படுத்தினார். ”இலங்கையில் தடுப்பூசி நிபுணர்கள் என யாரும் இல்லை. வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்திலும் ஒரு தடுப்பூசி நிபுணர் காணப்படுகின்றார். அவரும்கூட நுண்ணங்கிகள் விசேட வைத்திய நிபுணரே தவிர, தடுப்பூசி நிபுணர் அல்ல. ஆகவே அந்தப் பதவியில் ஒருவரை நியமிப்பதால் மாத்திரம், அவர் தடுப்பூசி நிபுணராக மாறிவிடமாட்டார். வெளிநாட்டில் இருந்தாவது ஒருவரை வரவழைக்க வேண்டும்.” என்ற பரிந்துரையை அவர் முன்வைக்கின்றார்.

பொய்யை பரப்பும் சமூக வலைத்தளங்கள்

”பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சில விடயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை, தடுப்பூசித் தொடர்பில் உண்மைத் தகவல்களை எவ்வாறு அறிந்துகொள்வது” என பம்பலப்பிட்டியை சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்பினார்.

கொரோனா தடுப்பூசிகளைப் பற்றிய தவறான தகவல்களை நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுகாதார நிபுணர்களின் உதவியுடன் தடுப்பூசிகள் குறித்த தவறான கூற்றுக்களை அகற்ற திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. மேலும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத தடுப்பூசிகள் குறித்த தகவல்களை நீக்கவுள்ளதாகவும் பேஸ்புக் அறிவித்துள்ளது.

இவ்வாறான ஒரு எதிர்மறையான சிந்தனை இலங்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தாலும், பலர் தடுப்பூசியை நம்பிக்கையுடன் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மக்களின் நம்பிக்கை

”தடுப்பூசியை பெற்ற பின்னர் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. சாதாரணமாகதான் இருக்கு. நான்கு நாட்கள் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்கள். எவ்வித பாதிப்பும் இல்லை.” என்கிறார் கொட்டாஞ்சேனை பிரதேசத்தை 65 வயதுடைய மொஹமட் நௌபர். ”தடுப்பூசி போட்டுக்கொண்டேன். எவ்வித நோய் அறிகுறியும் எனக்கு ஏற்படவில்லை. எனினும் ஒருசிலருக்கு மூன்று நாட்களுக்கு காய்ச்சல் காணப்பட்டதாக கூறினார்கள். சிலருக்கு உடல் வலி ஏற்பட்டதாக தெரிவித்தார்கள். என்னுடைய குடும்பத்தில் அனைவரும் போட்டுக்கொண்டோம். சிறிய வழிகள் ஏற்படலாம். எனினும் தைரியமாக இதனை போட்டுக்கொள்வது நல்லது” என்கிறார் கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர். ”தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் எவ்வித பிரச்சினையும் எனக்கு ஏற்படவில்லை. எங்களுடைய நன்மைக்கே தடுப்பூசியை அரசாங்கம் வழங்குகிறது. அதனைப் பெற்றுக்கொள்வது நல்லது” என்கிறார் கொச்சிக்கடையைச் சேர்ந்த மற்றுமொரு பெண்.

கொரோனா தொற்று பரல ஆரம்பித்த கடந்த வருட ஆரம்பத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது மக்களின் அவதானம் திரும்பியிருந்தது. எனினும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையில், அதுத் தொடர்பிலான தவறான புரிதல் இன்று பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தடுப்பூசி ஊடாக சில பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, அதற்காக தடுப்பூசியை பெற்றுக்கொள்வதை தவிர்ப்பது எந்த விதத்திலும் நியாயமாக அமையாது என்பதே சுகாதார நிபுணர்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் கருத்தாக அமைந்துள்ளது.

இவ்வாறான சூழலில், கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த வேண்டுமெனின், தடுப்பூசியை விரைவாக வழங்குவதே அதற்கு ஒரே தீர்வு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தடுப்பூசி மூலமே கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த முடியுமென ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மேலும், மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முறையான திட்டமொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கின்றார். அது என்னவென்பது தொடர்பில் ஜனாதிபதி வெளிப்படுத்தவில்லை. தற்போது உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மற்றும் அங்கீகரிக்கப்படவுள்ள நான்கு கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

ஆகவே தடுப்பூசியை விரும்பியோ விரும்பாமலோ பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதே யதார்த்தம்.

ச.பார்தீபன்

Facebook Comments