சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் குறித்ததொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில் 11 வருடங்களுக்கு முன்னர் ராஜபக்ச அரசாங்கப் பொலிஸாரால் கொல்லப்பட்ட ஒரு இளம் போராளி தொழிலாளியை கோட்டாகோகம’ நினைவுகூர்ந்துள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நிறைவேற்ற முயற்சித்த தனியார் துறை ஓய்வூதிய சட்டமூலத்திற்கு எதிராக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை அடக்குவதற்காக 2011ஆம் ஆண்டு கலகம் அடக்கும் பொலிஸாரால் ரொஷேன் சானக ரத்னசேகர சுட்டுக் கொல்லப்பட்டார்.
22 வயதான ரொஷேன், 2011 மே 30 அன்று துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்த நிலையில், 200ற்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் காவல்துறை மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் கும்பல்களின் தாக்குதல்களில் காயமடைந்தனர்.
ரொஷேனின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான கல்லொலுவ, மினுவாங்கொடையில் அரசாங்கப் படைகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.
மேலும் உள்ளூர் அரசியல்வாதிகளான பிரசன்ன ரணதுங்க மற்றும் மேர்வின் சில்வா ஆகியோர் ராஜபக்ச அரசாங்கத்தின் மீதான மக்களின் கோபத்தைத் தணிக்க தலையிட்டனர்.
கொல்லப்பட்ட ரொஷேன் சானக்கவின் குடும்பத்தினர் பின்னர் அலரிமாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்டஈடு வழங்குவதாகவும், நீதித்துறையின் மூலம் நீதி வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய பதவி விலகியதுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
எவ்வாறாயினும், இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி மகாநாம திலகரத்ன, குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதை நிராகரித்து, இராஜினாமா செய்த பிரதி பொலிஸ்மா அதிபர் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டதோடு, இரண்டாவதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தாபிந்து கூட்டமைப்பு, ஸ்டேண்ட் அப் தொழிலாளர் சங்கமம், வர்த்தக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கம் போன்ற சுதந்திர வர்த்தக வலயத்தை அண்மித்து செயற்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் குழு, 11 வருடங்களாக மறுக்கப்பட்டு வரும் ரொஷேன் சானக்கவிற்கான நீதியை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
காலி முகத்திடலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ரொஷேன் சானக்கவின் தாயாரும் கலந்துகொண்டார்.