தொல்பொருள் மதிப்புள்ள கட்டடங்களை விற்பனை செய்வதை தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன

0
Ivory Agency Sri Lanka

தலைநகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த கட்டடங்களை வெளிநாட்டினருக்கு ஒப்படைக்கும் தற்பேதைய அரசாங்கத்தை எதிர்த்து பொது ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக நாட்டின் முன்னணி வங்கி தொழிலாளர் சங்கங்களில் ஒன்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு விற்கப்பட்ட அரச சொத்துக்களை மீளப் பெறுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், நிதி அமைச்சின் கீழ் செலந்திவா என்ற நிறுவனத்தை அமைத்து, கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த பல கட்டடங்களை கையகப்படுத்த சமீபத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் கூறுகிறது.

“கொழும்பு பொது தபால் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு கட்டடம், இலங்கை வங்கியின் யோர்க் வீதி கட்டடம், ஹில்டன் ஹோட்டல், ஹைட் கட்டடம் மற்றும் கபூர் கட்டடம் ஆகியவற்றை முதல் கட்டமாக கையகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.”

ஓகஸ்ட் 1, 1955 அன்று இலங்கை வங்கியால் கொள்வனவு செய்யப்பட்ட யோர்க் வீதி கட்டடம், 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை வங்கியின் தலைமை அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக, இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த கட்டம் வங்கி சொந்தமானது என்றாலும், இது தொல்பொருள் மதிப்புடன் கூடிய, முழு தேசத்தின் பெருமையின் அடையாளமாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டடங்களில் பெரும்பாலானவை காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட பழங்கால கட்டடங்களாகும்.

செலந்திவா உரிமையில் 34% நிறுவன முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, செலந்திவாவால் உருவாக்கப்பட்ட துணை நிறுவனங்கள் முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் என்பதால், அவை பொது கணக்காய்வு மற்றும் கோப் குழுவின் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக, தொழிற்சங்கத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொடூரச் செயலானது, அரச சொத்தின் சாற்றினை உறிஞ்சுக் குடிக்கும் ஒரு மூலோபாய திட்டமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செலந்திவா முதலீட்டு நிறுவனம் பிரதமரின் கீழ் இயங்கும் நிதி அமைச்சின் கீழ் காணப்படுகின்றது.

செலந்திவா லெய்சர் நிறுவனத்தை கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனமாக இந்த மாதம் பதிவு செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை பகுதியின் பொருளாதார மையங்களையும், சிறந்த வரலாற்று, கலாச்சார மற்றும் தொல்பொருள் மதிப்புள்ள கட்டடங்களையும் தனியார் துறைக்கு அல்லது சர்வதேச முதலீட்டாள்களுக்கு வழங்குவதற்கான தீர்மானத்தை மாற்றியமைக்குமாறு 2021 ஜூன் 3ஆம் திகதி தொழிற்சங்கம் பிரதமருக்கு அறிவித்துள்ளது.

மேலும், இது குறித்து மதத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு தெளிவுபடுத்துவதற்கும் 2021 ஜூன் 11ஆம் திகதி இலங்கை வங்கி ஊழியர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

“எதிர்காலத்தில் அவர்களுடன் இது குறித்து விவாதிக்கவும், ஒரு பொது எதிர்ப்பைத் அணித்திரட்டவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். மேலும் இந்த தவறுக்கு எதிராக எங்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட பல சுயாதீன தொழிற்சங்கங்களின் உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட, பொது சொத்து மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்செய்துள்ளோம். மேலும் எங்கள் சங்கம் உட்பட பல்வேறு நிபுணர்களை உள்ளடக்கிய தேசிய நிபுணர்கள் முன்னணி, இந்த விடயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஏற்கனவே விவாதித்துள்ளது.”

நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி, நாட்டின் மிக மதிப்புமிக்க பொதுச் சொத்தை இவ்வாறு சுரண்டுவதற்கும் விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஒன்று திரளுமாறு, இலங்கை வங்கி ஊழியர் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளது.

Facebook Comments