கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இலங்கை, ஐரோப்பிய சந்தைக்கான வரிச்சலுகை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அளிக்கப்படும் நிதி உதவி ஆகியவற்றை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்குகிறது.
இலங்கை மீது கடுமையான பல நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய நாடாளுமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் இரண்டாம் ராஜபக்ச அரசாங்கம் அதற்கு முந்தைய ஆட்சி கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியதும் அங்கு தொடர்ச்சியாக சீரழிந்து வரும் மனித உரிமைகளின் பின்னணியிலும் ஐரோப்பிய நாடாளுமன்றம் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் ஆயத்த ஆடைகளுக்கான ஜிஎஸ்பி+ வரிச்சலுகையை ஐரோப்பிய ஆணையம் இடைநிறுத்த வேண்டும் என்று இந்த தீர்மானம் பரிந்துரைக்கிறது. இறக்குமதி வரிகள் நீக்கப்படுவதால் இலங்கை ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பிய நாடுகளின் சந்தையைச் சுலபமாக அணுக முடியும்.
ஜிஎஸ்பி+ சலுகையைப் பெற சில நிபந்தனைகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக கொள்கையின் அடிப்படையில், இந்தச் சலுகையைக் கோரிப் பெறுபவர்கள் “மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பில் 27 சர்வதேச கடப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்“.
இலங்கையில் மனித உரிமைகள் மிகவும் சீரழிந்து வருகின்றன என்பதற்கு அப்பாற்பட்டு இலங்கையில் ,“ சமூக செயற்பாட்டாளர்களுக்கான பொதுவெளி குறைந்து வருவது, தன்னிச்சையான கைதுகள், உரிய வழிமுறையின்றி தடுத்து வைக்கப்படுதல், சிறுபான்மையினர் இலக்கு வைக்கப்படுவது மற்றும் அரச நிர்வாகம் அதிகரித்த அளவில் இராணுவ மயமாக்கப்படுதல்“ ஆகியவை குறித்தும் தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற தீர்மானம் கூறுகிறது.
“கொடுத்த வாக்குறுதியை இலங்கை மீறியது”
அந்த சிறப்பு அமர்வில் உரையாற்ரிய சமத்துவத்திற்கான ஐரோப்பிய ஆணையர் ஹெலினா டாலி அம்மையார் கடந்த 2017ல் இலங்கை ஜிஎஸ்பி+ சலுகையை மீண்டும் கோரிய போது, சர்வதேச அளவுகோல்களுக்கமைய பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்படும் என்று இலங்கை உறுதியளித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். ஆனால் அது தற்போதைய ஆட்சியில் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மனித உரிமைகள் சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞர் அஹ்னாஃப் ஜஸீம் ஆகியோரின் விடுதலைக்காகவும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் நியாயமற்ற முறையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ள அவர்கள், சட்டத்தின் அடிப்படையில் பிணைக்குத் தகுதியானவர்களுக்கு அது அளிக்கப்பட வேண்டும் என்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அர்த்தபூர்வமான வகையில் தமது சட்டத்தரணிகள் மற்றும் குடும்பத்தாரை சந்திக்கவும், முன்னறிவிப்பின்றி இலங்கை மனித உரிமைகள் ஆணையம் அவர்களைச் சென்று சந்திக்க வழி ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
நிதியுதவிகள் நிறுத்தப்படும்
இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளில் உதவிவரும் ஐ நாவின் போதைப் பொருட்கள் மற்றும் குற்றங்களைத் தடுக்கும் அலுவலகம் மற்றும் பன்னாட்டு பொலிஸ் அமைப்பான இண்டர்போல் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் நிதியுதவிகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற தீர்மானம் கேட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்று கூறி இன மற்றும் மொழி சிறுபான்மையின குழுக்கள், சிவில் சமூகம், மனித உரிமை காப்பாளர்கள் ஆகியோர் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது
போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றைச் செய்தவர்களை மீதான விசாரணை மற்றும் அவர்களை நீதியின் முன்னர் நிறுத்தும் செயல்பாட்டில் எவ்விதமான சர்வதேச தலையீட்டையும் நிராகரித்துள்ள தற்போதுள்ள இலங்கை அரசு மீது விரக்தியடைந்துள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையர் அதற்கான சட்ட நடவடிக்கையை நாட்டிற்கு வெளியே எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளை தமது அரசின் முக்கியப் பொறுப்புகளில் நியமித்துள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, “ கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாதுகாப்புப் படையினர் மீதான விசாரணைகளுக்கு இலங்கை அரசு எவ்விதமான தடையையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; போர்க் காலத்தில் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மூத்த அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்; மூத்த அரச பொறுப்புகளுக்கு குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் இராணுவத் தளபதிகள் நியமிக்கப்படும் நடைமுறையை இலங்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்“ என்று கோரப்பட்டுள்ளது.
தீவிரவாத எண்ணங்களிலிருந்து மீள்வதற்கான இலங்கை அரசின் திட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் எவ்விதமான சட்ட வழிமுறைகளும் இன்றி இரண்டு ஆண்டுகள் வரை தடுத்து வைத்திருக்க முடியும். இதை மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றமும் இது உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.
கடும் பாதிப்புகள்
ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்கள் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அதன் மீதான உரிய நடவடிக்கையை எடுப்பார்கள்.
அந்த நாடுகள் ஜிஎஸ்பி+ சலுகைகளை நிறுத்துவது என்று முடிவு செய்தால், இலங்கையின் ஏற்றுமதி சந்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். அதன் மூலம் கணிசமான அளவுக்கு அந்நியச் செலாவணியை இழக்க நேரிடும்.
ஆடை ஏற்றுமதியே இலங்கைக்கு அதிகளவில் அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் இரண்டாவது பெரிய துறையாகும். ஜிஎஸ்பி+ மூலம் வேலை வாய்ப்புகள், பொருளாதார அபிவிருத்தி, அந்நியச் செலாவணி போன்ற பல விஷயங்களில் இலங்கை பலனடைந்துள்ளது.
அந்தச் சலுகை இழக்கப்பட்டால், இலங்கை குறைந்தது 150 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக ஏற்றுமதி சந்தையில் இழக்க நேரிடும். இறக்குமதி வரிகள் அதிகரிக்கும் போது சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதில் இலங்கை மிகவும் சிரமப்படும். அது உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை பாதிக்கும்.