சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பிய, மக்களிடையே தவறான எண்ணங்களை உருவாக்கியதாக, உலக சமூக ஊடக தினத்தன்று, எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னணி நுகர்வோர் உரிமை செயற்பாட்டாளர், சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக சட்ட உதவி வழங்கப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவரின் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட பதிவு இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் பதிவால், தமது அமைப்பு மற்றும் சட்டத்தரணிகள் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு எழுதிய கடிதத்தில், மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான அசேல சம்பத் குற்றப்புலனாய்வு பிரிவால் ஜூன் 26 திகதி கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு பிணை பெற்றுக்கொள்ளும் நோக்கில், மக்கள் சட்டத்தரணிகள் மன்றத்தின் சட்டத்தரணிகளான, சேனக பெரேரா, மஞ்சுள பத்திராஜ், மஞ்சுள ஸ்ரீ சந்திரசேன, நலக பிரியவன்ச, லலித் பதிரன ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியதாக, நாமல் ராஜபக்ச கையெழுத்திட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”எனினும் அன்று மாலை உங்கள் பேஸ்புக் பக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அசேல சம்பத்துக்கு உதவி செய்ததாகக் கூறியுள்ளீர்கள்”
அசேல சம்பத்துக்கு பிணை கோரி விண்ணப்பித்த சட்டத்தரணிகள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அல்லவென தெரிவித்துள்ள, சட்டத்தரணி நாமல் ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பதைப் போன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் எவரும், அந்த நாளில் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்
இதுபோன்ற பதிவினை பேஸ்புக்கில் வெளியிடுவதன் மூலம் அவரது அமைப்பும் அதன் சட்டத்தரணிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள சட்டத்தரணி நாமல் ராஜபக்ச, பேஸ்புக் பதிவினை திருத்துமாறும், எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்
‘பேஸ்புக்கில் பதிவிட்ட’ குற்றச்சாட்டில் கடந்த வருடம் 100ற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் சமூக ஊடகங்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வுப் பிரிவின் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் கூறுகிறார்.
உலக சமூக ஊடக தினம் ஜூன் 30.