காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வெளிநாட்டு நீதிபதிகளைக் கோரி கொழும்பிற்கு விரைந்தனர்

0
Ivory Agency Sri Lanka

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமது உறவுகளுக்கு சர்வதேச நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என வடக்கு, கிழக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச பிரதிநிதிகள் முன்னிலையில் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கனடாவில் அமைச்சராக பதவியேற்று ஒரு வாரதத்திற்குள், கொழும்பில் உள்ள கனேடிய தூதரகத்தில், நேற்றைய தினம், உயர்மட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்தவும், இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் இலங்கையில் தமிழ்த் தாய்மார்கள் நடத்தி வரும் நீண்ட போராட்டத்தின் 2,354வது நாளில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி, தமது போராட்டத்தின் கோரிக்கைகளை சர்வதேச நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“நீண்டகாலம் இழுத்துச் செல்லாமல் எங்களது போராட்டத்திற்கு தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென கோரினோம். எமது போராட்டத்தை சர்வதேச நீதிமன்றில் முன்வைத்து தீர்வினைப் பெற்றுத்தருமாரு கோரினோம்.”

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழு தமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்ததாக வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிற்றா தெரிவிக்கின்றார்.

“எமது சாட்சிகள் அழிவதற்கு முன்னர் நீதியை பெற வேண்டும் என்பது தொடர்பில் வலியுறுத்தினோம். எதிர்காலத்தில் எமது போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.”

தாம் கோரிய நீதியை வெளிநாட்டவர்கள் பெற்றுத்தருவார்கள் என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மனுவெல் உதயச்சந்திரா நம்பிக்கை வெளியிட்டார்.

“எங்கள் பிரச்சினை ஜெனிவா வரை சென்றாலும் நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. இது குறித்து அவர்களிடம் தெரிவித்தோம். எதிர்காலத்தில் அவர்கள் என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை. எனினும் நல்ல தீர்வை வழங்குவார்கள் என நம்புகிறோம்.”

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தீர்மானத்திற்கு ஜெனீவா அமர்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

அண்மையில் கனடாவில் அமைச்சராக பதவியேற்ற கெரி ஆனந்தசங்கரி சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற சட்டத்தரணி ஆவார்.

மேலும், இலங்கையின் பாதுகாப்புப் படைகளிடமும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அதிகாரிகளிடமும் பொறுப்புக்கூறலை கோருவதில் சர்வதேச தமிழ் சமூகத்தில் அவர் முக்கியமானவராக திகழ்கின்றார்.

ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அண்மையில் கெரி ஆனந்தசங்கரிக்கு வீசா வழங்க மறுத்து, அவர் நாட்டுக்குள் பிரவேசிப்பதைத் தடுத்துள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஓகஸ்ட் முதலாம் திகதி இலங்கையில் உள்ள கனேடிய தூதரகத்தில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

Facebook Comments