சுமந்திரனின் சுகாதார பிரேரணைக்கு தொழிலாளர்களிடமிருந்து முன்மொழிவுகள்

0
Ivory Agency Sri Lanka

கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களுக்கு எதிராக சட்டபூர்வமாக போராடவும், பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிமுகப்படுத்தி ஒரு வருடம் கழித்து, தனியார் துறை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் புதிய திட்டங்களை முன்வைத்துள்ளது.

தொழிலாளர்களை பாதிக்கும் இரண்டு திருத்தங்கள் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டுமென, சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அன்டன் மார்க்ஸ், இந்த மசோதாவை ஒரு தனிநபர் பிரேரணையாக நாடளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய, எம்.ஏசுமந்திரனுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

”சட்டத்தின் கீழ் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படும் போது ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் ‘தொழிற்சாலை சுகாதாரக் குழுக்களை அமைத்தல் மற்றும் இந்த குழுக்கள் அவ்வப்போது தொழிற்சாலைகளில் சுகாதார அதிகாரிகள் வழங்கிய சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்,” என சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் பொது ஊழியர் சங்கம் எம்.ஏ சுமந்திரனுக்கு பரிந்துரைத்துள்ளது.

”பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டால் தொற்று நோய்கள் பரவுவதை கண்காணிக்க மாகாண வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார ஊழியர்களுக்கு அதிகாரம் அளித்தல்,
மேலதிகமாக பொது சுகாதார ஊழியர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு மற்றும் இதர தொழில்நுட்ப மற்றும் மனித வளங்களை வழங்குவதோடு, அதை மாகாண சுகாதார அலுவலகப் பகுதியில் தொற்று நோய்களைத் தடுக்கும் மையமாக அறிவித்தல்,” ஆகிய விடயங்களையும் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்டன் மார்கஸ் முன்மொழிந்துள்ளார்.

பிரித்தானிய ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி கொரோனா இரண்டாவது அலை அலையை கையாள்வதில் ஸ்ரீலங்கா இராணுவம் மனிதாபிமானமற்ற வகையில் செயற்படுவதாக முறைப்பாடுகள் எழுந்த நிலையில், எம்.ஏ சுமந்திரன் கடந்த ஒக்டோபரில் நாடாளுமன்றத்தில் பிரேரணையை அறிமுகப்படுத்தினார்.

இது பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு நிலையை அறிவிக்கவும், பொது சுகாதாரத்திற்காக விசேட நடவடிக்கைகள் எடுக்கவும் மற்றும் அது தொடர்பான விடயங்களைக் கையாளவும் பயன்படும் சட்டமாகவும் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்கவும், ஒரு விசேட அவசர குழுயை நியமிக்கவும் அனுமதிக்கும்.

சுகாதார அவசரக் குழுவில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுகாதார, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் அடங்குவர்.

மேலதிகமாக, எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனைக்கு அமைய, ஐந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபாநாயகர் நியமிப்பார்.

அவசரகால நடவடிக்கையின் போது உதவித் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக அல்லது பெயரளவு விலையில் நிவாணரத்தை வழங்க சமூகநல அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது சுகாதார அவசரநிலையின்போது, பொதுச் சந்திப்புகள், மத வழிபாடுகள், அத்தியாவசியமற்ற தொழில்கள் மற்றும் பொது இடங்களில் கூடுதல் ஆகிய செயற்பாடுகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய 14 நாட்களுக்கு மேற்படாமல் கட்டுப்படுத்த முடியும்.

பிரேரணை அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகின்ற நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ள நிலையில், பிரேரணை இதுவரை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை.

Facebook Comments