தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெண்களிடம் தெரிவித்த ரணில் (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தாமல் இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தொற்று நோய் அச்சுறுத்தலால் பொருளாதார ரீதியாக பெண்களின் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

“பொருளாதாரம் அனைவரையும் பாதிக்கிறது, ஆனால் இப்போது பெரும்பாலும் பெண்களே வேலை இழக்கிறார்கள். அவர்களின் பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது முக்கிய மார்க்கம் ஆடைத் தொழிற்துறை. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன சில தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன அவைகள் மீளத் திறக்கப்படமாட்டாது. மத்திய கிழக்கில் பல பெண்கள் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக தொற்றுநோய் அச்சுறுத்தலால் பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர்”

சில தொழிற்சாலைகளில் தற்காலிக தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதில் பெண்களே முன்னணியில் இருப்பதாகவும் நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் பெண்கள் அமைப்பான ”லக் வனிதா” அமைப்பின் உறுப்பினர்கள் உடனான சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்திய பின்னர் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனக் கூறிய முன்னாள் பிரதமர், மேலும் தொற்றுநோய் காரணமாக ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடத்தின் இலங்கைக்கான அந்நிய செலாவணி வருவாயின் முக்கிய ஆதாரமாக “நாட்டின் வீரர்கள்“ என வர்ணிக்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர்களே காணப்படுவதாக, வெரைட் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் 2019ஆம் ஆண்டு, புள்ளிவிபரங்களின்படி, கடந்த வருடம், வெளிநாட்டு தொழிலாளர்கள், நாட்டிற்காக 6.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டிக்கொடுத்துள்ளதாக வெரைட் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருந்ததோடு, இது கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்களாகும்.

அந்த அறிக்கையின்படி, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் மத்திய கிழக்கில் பணியாற்றுவதோடு, அவர்களில் பெரும்பாலானோர் பெண்களாவர்.

உலகளாவிய கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஏராளமான இலங்கையர்கள் தொற்றுநோய்களுக்கும், வேலை இழப்பு அபாயங்களுக்கும் உள்ளாகியுள்ளதோடு, ஏற்கனவே பலர் வெளிநாடுகளில் இறந்துவிட்டதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்த சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய, பிரதமர் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் மேம்பாட்டிற்கு உதவிகளை வழங்குவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியதோடு, மேலும் பெண்களை மீண்டும் தொழிற் சந்தையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments