அண்மைய பேஸ்புக் தடைக்கு எதிராக தொழிற்சங்க தலைவர்கள் எதிர்ப்பு

0
Ivory Agency Sri Lanka

சமூக வலைதளங்களில் அரசை விமர்சிக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்பதோடு, அரச சேவையில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்து வெளிப்பாட்டிற்கு எதிரான விடயம் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில், அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பு குறித்து வெளியிடப்பட்ட சமீபத்திய சுற்றறிக்கையை கண்டித்துள்ள சுகாதார மற்றும் ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் அதனை மீறுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.

அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு அரச ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தங்களின் பிரச்சினைகளை விவாதிக்க கூட அவகாசம் கொடுக்காத அரசை குறை கூறாமல் வேறு என்ன செய்ய முடியுமென, சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அரச மற்றும் பல நிர்வாகிகள் தங்கள் ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறித்து பின்பற்றிய பேச்சுவார்த்தை அல்லாத முறைக்கு அமைய நாம் செய்ய வேண்டியது எல்லாம் விமர்சிப்பதுதான். ஏனென்றால் பேச்சுவார்த்தை இல்லை என்றால், முடிவெடுக்கும் இடங்களில் எமது பிரச்சினைகளை முன்வைக்க வாய்ப்பில்லை என்றால், விமர்சிக்காமல் வேறு என்ன செய்ய முடியும்? அப்போது நாம் செய்யும் விமர்சனங்களால் தான் சில விடயங்கள் சரியாக இடம்பெறும்.”

தீர்க்க முடியாத பிரச்சினைகள்

”இந்த நேரத்தில் அரசாங்கம் விமர்சனங்களை நிறுத்துவதற்கான சுற்றறிக்கைகளை வெளியிடுவதை விடுத்து, இந்த விமர்சனங்கள் என்னவென்பதை ஆராய வேண்டும்.” என ரவி குமுதேஷ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அவர்களை மௌனமாக்குவதற்குப் பதிலாக, இந்த ஆட்சியாளர்கள் தங்கள் ஊழியர்களின் நலன்களைப் பற்றி அவர்களது தொழிற்சங்கங்களிடமோ அல்லது பங்குதாரர்களிடமோ பேச்சு நடத்த வேண்டும்.
முன்னாள் சுகாதார அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களைப் பாருங்கள், குறிப்பாக தொழிற்சங்கங்கள், வாழ்நாள் முழுவதும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் இரவு 12 மணிக்குக்கூட பேசி பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்தோம். அப்போது அவர்களின் பிரச்சினைகளை தெரிந்துகொண்டோம். அவர்கள் எங்கள் பிரச்சினைகளை அறிந்துகொண்டார்கள்.
இறுதியில், எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய இடத்தில் பணியாற்ற ஆரம்பித்தோம்.
பிரச்சினை தீராவிட்டாலும், குறைந்தபட்சம் இந்த பிரச்சினையை தன்னால் தீர்க்க முடியாது என்பதை ஒரு உணர்த்த வாய்ப்பு கிடைத்தது. சில சந்தர்ப்பங்களில், நாங்கள் அப்படித்தான் இருந்தோம். ”

எவ்வாறாயினும், தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் எந்தவொரு பிரச்சினை குறித்தும் கலந்துரையாட முன்வருவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தையில்லா முறைமையின் கீழ் அமைச்சர்கள் அல்லது முக்கிய தீர்மானம் எடுப்பவர்கள் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் ஜனாதிபதிக்கு எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஏன் தவறு செய்கிறார்

“அப்படியானால், அது எதுவாக இருந்தாலும் சரி அதை அப்படியே செயல்படுத்துவதே ஒரு வழி.
அதனால்தான் ஜனாதிபதி எடுத்த தீர்மானங்கள் தவறானவை என மக்கள் விமர்சிக்க வேண்டியேற்படுகின்றது.”

அங்கும் இங்கும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் ஜனாதிபதி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றாலும், இன்று அந்த நடைமுறை வீழ்ச்சியடைந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இதனால் ஜனாதிபதிதான் எதற்கும் முதல் தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்படும். உதாரணமாக, நம் நாட்டில் கொவிட் தொடர்பாக பல தீர்மானங்கள் முதலில் ஜனாதிபதியால் எடுக்கப்படுகின்றன. பின்னர் அந்த தீர்மானங்களை விமர்சிப்பதால் பல காரண காரணிகள் வெளியாகின்றன.”

சுகாதார செயலாளர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலர் இன்று அதிகாரிகளுடன் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்துவதில்லை, ”ஒரு வெற்றிகரமான முடிவுக்கு கொண்டுச் செல்லக்கூடிய அளவுக்கு திறமை, தன்னம்பிக்கை மற்றும் பதவிக்கு ஏற்ற சுதந்திரமான தீர்மானங்களை எடுக்கும் திறனும் இல்லை. ”

”சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சு நடத்தி, எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து அதனுடன் தொடர்புடைய அமைச்சர் அல்லது ஜனாதிபதியை சம்மதிக்க வைக்கும் துணிச்சல் இல்லாமை குறிப்பிடத்தக்க பலவீனமாக அமைந்துள்ளது”

சட்டவிரோத சுற்றறிக்கைகள்

இவ்வாறாக அரச ஊழியர்களின் பேச்சு சுதந்திரத்திற்கு இடையூறான சுற்றறிக்கைகள் சட்டவிரோதமானது என, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த, இரு சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர்களான, தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னப்பிரிய மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர், குறிப்பிட்டுள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்புகள் கூட அரச ஊழியர்களுக்குத் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும், அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்குமான உரிமையை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக (2012) தொடுத்த அடிப்படை உரிமை வழக்கில், அரச ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி கருத்து தெரிவிக்க முடியும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய விடயத்தையும், கொரோனா சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை நிறுத்த நீதிமன்ற உத்தரவை பொலிஸார் நாடிய சந்தர்ப்பத்தில், அத்தகைய உத்தரவு அடிப்படை சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட விடயத்தையும் அவர்கள் நினைவூட்டியுள்ளனர்.

“போராட்டக்காரர்களுக்கு சுகாதார வழிகாட்டுதல்களை விளக்குமாறு நீதிமன்றம் காவல்துறையிடம் கூறியது” என சமன் ரத்னப்ரியா கூறினார்.

“இந்த அரசாங்கத்தின் மக்கள் துரோக வேலைத்திட்டத்தினால் அரச ஊழியர்களும் அரசாங்கத்தின் சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்கின்றனர். இந்த விவகாரத்தில் அவர்களை ஒடுக்கவும், அவர்களின் குரலை நசுக்கவும் இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது என்பது தெளிவாகிறது. இதுபோன்ற சட்டங்கள் கொண்டுவந்து அரச ஊழியர்களை அச்சுறுத்தி கருத்து தெரிவிக்கும் உரிமையை அரசாங்கம் கட்டுப்படுத்த முடியாது. எனினும், இந்த உத்தரவுகளை நாங்கள் தவிர்க்க முடியாமல் மீறுவோம். இந்தக் குற்றங்களில் இருந்து அரச ஊழியர்கள் வரை தொழிற்சங்க இயக்கமாக குடிமக்களின் உரிமைகளையும் நாங்கள் பாதுகாக்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“உலகில் சமூக உரிமைகள் விரிவடைந்து வருகின்றன. இலங்கையில் இது சுருங்குகிறது அதனால்தான் இவ்வாறு நடக்கிறது” என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இவ்வாறான சுற்றறிக்கைகள் அரச ஊழியர்களின் அரசியல் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் மற்றும் 1947-48ஆம் ஆண்டுகளில் பொது வேலைநிறுத்தங்கள் மூலம் பெற்ற வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டவை என, இலங்கையின் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் லீனஸ் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார். 75 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அதற்கு சவால் விடுக்கப்படுவதாகவும், அதே போல் அதனை திசைத் திருப்ப முயற்சிக்கப்படுவதாகவும் இது அர்த்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடந்தகால ஜனநாயக சாதனைகளை பேணிக்காப்பது இன்றைய எமது பொறுப்பாகும் என லீனஸ் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

Facebook Comments