மனித உரிமைகள் பிரச்சினை காரணமாக இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்படும் பயிற்சியை தொடரப்போவதில்லை என ஸ்கொட்லாந்து பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
நேற்று ஸ்காட்லாந்து பொலிஸ் அதிகாரசபையின் உயர் அதிகாரிகளின் ஒன்லைன் மாநாட்டில் ஸ்காட்லாந்து பொலிஸ் தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இலங்கை பொலிசாருக்கு பயிற்சியளிக்க வேண்டாம் என கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஸ்காட்லாந்தின் பொலிஸ் தலைமை அதிகாரி இயன் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பயிற்சி 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்கு பிரித்தானியா மீளாய்வுக்கு பொறுப்பாக உள்ளது.
அந்த காலப்பகுதியில் ஸ்கொட்லாந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவரும் இலங்கைக்கு செல்ல மாட்டார்கள் என பொலிஸ் மா அதிபர் லிவிங்ஸ்டன் மேலும் தெரிவித்தார்.
பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சித்திரவதை குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்படும் பயிற்சியை நிறுத்துமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.