வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு நிவாரணமாக அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு ஆடைத்துறை, பெருந்தோட்டம் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வழங்கப்படாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
“பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் பிற தனியார் துறை தொழில்துறையினர் மற்றும் சேவை ஊழியர்களுக்கு ஜனவரி 21ஆம் திகதிக்கு முன்னர் 5,000 ரூபாய் நிவாரண உதவித் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், தொழிற்சங்கங்களாகிய நாங்கள் 21ஆம் திகதி அரசுக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.” அரச தொழில் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமான சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் தொழிலாளர் சங்கத்தின் அரச விருது பெற்ற செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு விஜயம் செய்து நாடு திரும்பிய அமைச்சர் பசில் ராஜபக்ச, அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவாக வழங்குவதாக அறிவித்தார். எனினும் முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்தாலோசித்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தொழில் அமைச்சருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ரத்னசிறி நேற்று (13) விடுத்துள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், “மாதாந்த சம்பள நிரந்தர/ தற்காலிக/ ஒப்பந்த உத்தியோகத்தர்கள், தின சம்பள உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்” மாதாந்த கொடுப்பனவுக்கு தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளின் ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பாக பொது நிறுவனங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல்களை வழங்குவார் என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
கொவிட் வைரஸ் பரவி நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், ஏற்றுமதித் துறையில் தனியார் துறை ஊழியர்கள் மேலதிக ஊதியம் இன்றி பணிபுரிந்ததாக அன்டன் மார்கஸ் உட்பட தனியார் துறை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். ஆனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் நிவாரண உதவித்தொகை அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர்கள் கோருகின்றனர்.
அரசாங்க ஊழியர்கள் நூறாயிரக்கணக்கான ரூபாய்களை சம்பளமாக பெற்றுக்கொண்டு 5,000 ரூபாய் கொடுப்பனவைப் பெறுகிறார்கள், எனினும் ஆடை, பெருந்தோட்ட மற்றும் பிற தனியார் துறை ஊழியர்களின் சொற்ப ஊதியத்தையே பெறுகின்றார்கள் எனவும், அரசாங்கம் குடிமக்களை வித்தியாசமாக நடத்துவதாகவும் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை 50 சதவிகிதத்தால் குறைக்க வேண்டுமென, அரச தொழில் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும், சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் சங்கம், இலங்கையின் சுதந்திர தொழிற்சங்கக் கூட்டமைப்பு, இலங்கை வர்த்தக மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஊழியர் சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் ஆகியன வலியுறுத்தியுள்ளன.
நாட்டின் தற்போதைய நிலைமையில் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க முடியாது என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர்களுடன் ஜனவரி 10ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“தொழில்களையும் சேவைகளையும் வீழ்ச்சியடையச் செய்யாமல் நடத்திச் செல்ல கடந்த காலங்களில் நாங்கள் கூடுதல் பணத்தை செலவிட வேண்டியிருந்தது. ஏற்றுமதி வருமானமும் குறைந்துள்ளது. சுங்க வரி அதிகரிப்பு, மூலப்பொருட்கள் பிரச்சினைகள் மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் குறைப்பு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் உரிமையாளர்களுக்கு இந்த கொடுப்பனவுகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது” என ஊழியர் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் மங்கள யாப்பா தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், தோட்டப் பகுதிகளின் தற்போதைய நிலைமைய மாற்றமடையும் வரை, 5 சதத்தைக்கூ கூட வழங்குவது கடினம் என பெருந்தோட்ட நிறுவன உரிமையாளர்கள் தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
”தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதால், தேயிலை உற்பத்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உலக சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்துள்ள போதிலும் பெருந்தோட்ட நிறுவனங்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதனை தரகர்கள் பெற்றுக்கொள்கின்றனர் மறுபுறம் இரசாயன உரத் தட்டுப்பாட்டால் தேயிலை கொழுந்து உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வளவு பெரிய கொடுப்பனவை ஒருபோதும் வழங்க முடியாது” என ஊழியர் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் மங்கள யாப்பா தெரிவித்தார்.