புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்படும், பீரிஸ் சர்வதேசத்திடம் கூறுகிறார்

0
Ivory Agency Sri Lanka

நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு வெளிநாடுகளில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் உதவியை நாடும் அரசாங்கம், புலம்பெயர் தமிழ் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு தயாராகி வருவதாக சர்வதேச சமூகத்திற்கு அறிவித்துள்ளது.

“2012 ஆம் ஆண்டின் ஐ.நா ஒழுங்குமுறை எண் 1இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. தற்போது, 318 நபர்கள் மற்றும் 04 உரிமைகோரல்களை நீக்க முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.”

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடந்த ஜூன் 13ஆம் திகதி ஜெனிவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது அமர்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் சமூகம் மற்றும் நாட்டின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை தயாராகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மார்ச் 2021 இல், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பலம் வாய்ந்த அமைப்புகள் உட்பட பல புலம்பெயர் தமிழ் குழுக்களை தடை செய்தது.

உலகத் தமிழ் பேரவை (GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), கனேடியத் தமிழர் பேரவை (CTC), அவுஸ்திரேலியத் தமிழர் பேரவை (ATC), கனேடியத் தமிழ்த் தேசியப் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றை பாதுகாப்பு அமைச்சு தடை செய்தது.

இந்த குழுக்களில் சில 2014 இல் தடை செய்யப்பட்டன, ஆனால் 2015 இல் அரசாங்கத்தால் மீண்டும் பட்டியலிடப்பட்டன.

2012 இன் ஐ.நா 1 (4) விதியின் கீழ் அவர்கள் தடை செய்யப்பட்டனர்.

அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன கையொப்பமிட்டுள்ளார்.

பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, மலேசியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த பலரையும் அரசாங்கம் பட்டியலில் சேர்த்திருந்தது.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் இந்த வருடம் மார்ச் மாதம் கூட்டப்பட்ட பலதரப்பு மாநாட்டிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பிலும் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விருப்பம் வெளிப்படுத்தப்பட்டது.

இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க, புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தைத் தீவுக்கு கொண்டுவருவதற்கு இது ஒரு பாலமாக இருக்கும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் உறுதியளித்திருந்தது.

புலம்பெயர் முதலீட்டுக்கான தடைகள்

கடந்த ஏப்ரல் மாதம் வடக்கிற்கான விஜயத்தின் போது கொழும்பிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கைச் சந்தித்த போது, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் மக்களிடம் ஜனாதிபதி கேட்டதாகவும், ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தடைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சட்ட நடைமுறைகளின் சிக்கலான தன்மையைக் காரணம் காட்டி, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கின் உதவியை ஆளுநர் நாடியுள்ளதாக தமிழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments