அதிகாரிகள், பொருளாதாரத்தால் வைத்தியர்களின் கல்விக்கும் பாதிப்பு

0
Ivory Agency Sri Lanka

அரசாங்கம் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விரக்தியால் வைத்தியர்களின் மொழி குறித்த கல்வி தடைபட்டுள்ளது.

தொடர்ந்து ஒன்பது வருடங்களாக நடத்தப்பட்டு வந்த வைத்தியர்களுக்கான இரண்டாம் மொழிப் பயிற்சி வகுப்பு பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

“கடந்த ஆண்டு முதல் சுகாதார அமைச்சு அக்கறை காட்டாத காரணத்தால், 2022 ஜனவரி வரை மிக மெதுவாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஜனவரி மாதத்திற்குப் பின்னர் பாடத்திட்டத்தை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு இதுவரை தவறிவிட்டது. சுகாதார அமைச்சிடம் போதிய நிதி இல்லாததே இதற்கான காரணம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு, தேசிய மொழி மற்றும் கல்விப் பயிற்சி நிறுவனம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க சங்கம் ஆகியன இணைந்து, வைத்தியர்களுக்கான இரண்டாம் மொழிப் பயிற்சியை, 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடத்தி வருவதோடு, 4,000ற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு மொழிப் பயிற்சியை வழங்க முடிந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கையின் அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகிய இரண்டும் அரச நிறுவனங்களாக இருப்பதால், இந்த நிறுவனங்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்து இந்தப் பாடநெறியை நடத்த முடியும், ஆனால் சுகாதார அமைச்சின் கல்வி, பயிற்சி மற்றும் ஆய்வுப் பிரிவு இந்தப் பாடத்திட்டத்தை தொடர்வதில் ஆர்வம் காட்டவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வைத்தியர்களின் இந்த மொழிப் பயிற்சியின் மூலம், உலகின் பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாடு முழுவதும் தரமான சுகாதார சேவைகளைப் பேண முடிந்ததாக செனல் பெர்னாண்டோ, நேற்று (23) புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”நோயாளிகளின் தாய்மொழியில் தொடர்பு கொள்ளக்கூடிய வைத்தியர்களை உருவாக்குவதற்காக நடத்தப்படும் பாடநெறிக்கு தேவையான பங்களிப்பை வழங்குவதன் மூலம் நாட்டில் சுகாதார சேவையில் நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் அரசாங்கம் உறுதிப்படுத்த முடியும்.” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments