மூன்று மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சினால் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பலம்வாய்ந்த புலம்பெயர் தமிழர் அமைப்பின் தலைவர்களை இலங்கைக்கு வருமாறு நீதி அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் சட்டத்தரணியும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருமான கலாநிதி விஜயதாச ராஜபக்ச, தடை நீக்கப்பட்ட கனேடிய தமிழ் காங்கிரஸ் தலைவர் சிவன் இளங்கோ மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் டென்டன் துரைராஜா ஆகியோரிடம், நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக அனைத்து இலங்கையர்களுடனும் உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கனேடிய புலம்பெயர் அமைப்புகளை நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கியமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பிய கடிதம், அந்த அமைப்பின் பிரதிநிதி பஞ்சலிங்கம் கந்தையாவினால் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி புதன்கிழமை கையளிக்கப்பட்டபோது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக, அமைச்சரின் ஊடகச் செயலாளர் விதுரங்க சிறிமான்ன சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் சரியான வழிகாட்டுதலைப் பாராட்டிய அதேவேளை, இலங்கையை அங்கீகரித்து மதிக்கும் வகையில் நீண்டகால நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் வலியுறுத்தினர்.”
என சட்டத்தரணி விதுரங்க சிறிமான்ன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் மக்களுக்கு இலங்கையில் அவர்கள் விரும்பும் பிரதேசத்தில் தொழில்களை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்குவதாகவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
“அனைத்து இலங்கையர்களும் சமமாகவும், பாகுபாடு இன்றியும் நடத்தப்படுவார்கள் எனவும், புலம்பெயர்ந்த மக்கள் இலங்கையில் அவர்கள் விரும்பும் பகுதியில் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளைத் ஆரம்பிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.”
வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளின் வைத்தியத் தேவைகளுக்காக கனேடிய தமிழர் பேரவை அண்மையில் நிதியுதவி வழங்கியதாக விதுரங்க சிறிமான்ன விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட 6 தமிழ் அமைப்புகள் மற்றும் 316 தனிநபர்கள் மீதான தடை ஓகஸ்ட் முதலாம் திகதி நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு ஓகஸ்ட் 14ஆம் திகதி அறிவித்தது.
அவுஸ்திரேலியத் தமிழர் பேரவை – ATC, உலகத் தமிழர் பேரவை – GTF, உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – WTCC, தமிழ் ஈழ மக்கள் கூட்டமைப்பு – TEPA, கனேடியத் தமிழர் பேரவை – CTC, பிரித்தானிய தமிழர் பேரவை – BTF ஆகியனவே அந்த ஆறு அமைப்புகள்.