இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் கோரி 34 வருடங்களுக்கு முன்னர் கிழக்கில் உண்ணாவிரதம் இருந்த போது உயிர் தியாகம் செய்த தாய்க்கு அஞ்சலி செலுத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சியை பொலிஸார் முறியடித்துள்ளனர்.
மட்டக்களப்பு நாவலடி கிராமத்தில் உள்ள அரது நினைவு தூபிக்கு அருகில் ஏப்ரல் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் மற்றும் ஜி. ஸ்ரீநேஷனை முயற்சிக்கும்போது, நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட தடை உத்தரவைப் காட்டி சீருடையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் இருவரையும் தடுத்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் உண்ணாவிரதம் இருந்த போது உயிரிழந்த பூபதி கணபதிப்பிள்ளையின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவித்துள்ளார்.
அன்னையின் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உட்பட 11 பேருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (ஏப்ரல் 18) தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா. சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஷ்வரன், ஞா.ஶ்ரீநேசன், மாநகர முதல்வர் தி.சரவணபவான், முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் இ.பிரசன்னா, இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி தலைவர் கி.சேயோண், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் லோ.திபாகரன், சிவில் அமைப்பு தலைவர் ச.சிவயோகநாதன் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தினை வெளியேறக்கோரியும் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி “அன்னை பூபதி” (பூபதி அம்மாள்) என்று போற்றப்படும் பத்து பிள்ளைகளின் தாயான கணபதிப்பிள்ளை பூபதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
அன்று முதல் 32 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு தன் உயிருக்கு விடைகொடுத்தாள்.
அவரது கைகளில் ஆயுதம் இருக்கவில்லை, சுதந்திரத்தை மாத்திரமே அவர் கோரினார்.
தன் மக்களுக்காக அவர் செய்த அகிம்சைப் போராட்டத்தின் நியாயமான காரணத்திற்காகவும், பொது நலனுக்காக அவள் செய்த தியாகத்திற்காகவும் ஒரு பொதுவான தாய்மையை அவளிடம் ஒப்படைத்து “பூபதி அம்மா” என அழைத்து மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இறந்தவர்களை நினைவு கூர்வதும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதும், அவர்கள் இறந்த நினைவாக அவர்களை வழிபடுவதும் இந்து பாரம்பரியத்தில் மிக முக்கியமான சடங்காகக் கருதப்படுகிறது.
பூபதி அன்னையின் நினைவேந்தலைத் தடுத்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (19) கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள போதிலும் அரசாங்கம் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்தவில்லை என வலியுறுத்தினார்.
அன்னை பூபதி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் உண்ணாவிரதம் இருந்ததாகவும், எந்த அடிப்படையில் நினைவேந்தலை அரசாங்கம் தடுத்தது எனவும் அவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
தமிழர்களின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த அன்னையை நினைவு கூருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த காலத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒவ்வொரு ஆண்டும் அவரது அன்னைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர், ஆனால் கடந்த வருடம் காத்தான்குடி பொலிஸார் அவரது தாயாரை நினைவு கூர்ந்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம் என எச்சரித்து அவரது உறவினர்களை அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தனர்.
கடந்த வருடம், மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவலடியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவிடத்தில் அவரை நினைவுகூரும் பாரம்பரிய சமயக் கடமையைச் செய்யவிடாமல் காத்தான்குடி பொலிஸார் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளை அவரது உறவினர்களுக்கு ஒரு கொடூரமான சட்டத் தடையாக அறிமுகப்படுத்தினர்.