படையினரை ‘சரியான அளவில் பேணுவது’ என்பது குறைப்பு அல்ல

0
Ivory Agency Sri Lanka

இராணுவத்தினரை ‘சரியான அளவில் பேணுதல்’ மற்றும் ‘சில கிராமப் பகுதிகளில் இருந்து இராணுவத் தளங்களை அகற்றுவது’ தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் புனித இடங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடிய போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணுவத்தை சரியான அளவில் ‘பேணுதல்’ என்பதன் அர்த்தம் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைப்பதல்ல என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விளக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ‘சரியான அளவில் பேணுதல்’ என்றால் என்ன என்பதை விளக்கவில்லை.

இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சந்திம வீரக்கொடி, யு.கே.சுமித் உடுகும்புர, கலாநிதி மேஜர் பிரதீப் உந்துகொட, மேஜர் சுதர்ஷன தபிடிய, நிமல் ஆகியோர் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் தலைமையில் நடைபெற்ற குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். சரத் வீரசேகர, நிமல் பியதிஸ்ஸ மற்றும் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்கள், அந்தந்த அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்திய குழு, தீவிரவாதத்தை தோற்கடிக்க பாடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக நாடாளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ. ஜனகாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இராணுவத்தினருக்கு விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பயணத் தடையானது இராணுவத்தினரின் மன உறுதியை பாதிக்கும் என்பதால் அதற்கு எதிராக நிற்க வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இனப்படுகொலை செய்துள்ளதாக கனேடிய நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக எவ்வாறு எதிர்ப்பை தெரிவிப்பது என்பதை தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் குழு கோரியுள்ளது.

Facebook Comments