தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் இருந்து தொழிற்சங்கங்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கம், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் அடங்கிய முத்தரப்புக் குழுவான தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவிலிருந்து நான்கு பெரிய தொழிற்சங்கங்கள், தேவையான உறுப்பினர்களை நியமிக்கவில்லை, என்ற காரணத்திற்காக தொழில் அமைச்சர் நீக்கினார்.
சுயாதீன தொழிற்சங்கங்களின் பிரதிநிதித்துவத்தை நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகளுக்கு அந்த இடத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி தொழிற்சங்கம், இந்த தீர்மானத்தை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
`சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சங்கங்களை பராமரிக்கும் ஒரு சங்கமாக துறைசார்ந்து தேவையான உறுப்பினர்களை நாங்கள் பெற்றுள்ளோம். மேலும், நாங்கள் நீண்ட காலமாக தொழிலாளர் ஆலோசனைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறோம்,” என சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் பொது சேவை தொழிலாளர்கள் சங்கத்தின் (FTZGSWU) இணை செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.
தொழில் அமைச்சர், தொழிலாளர் அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர் நாயகம், முன்னாள் உதவி தொழிலாளர் ஆணையாளர், தொழிங்சங்கப் பிரிவு மற்றும் தற்போதைய உதவி தொழிலாளர் ஆணையாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், FTZGSWU தாக்கல் செய்த மனு ஜூன் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தொழிலாளர் தேசிய ஆலோசனைக் குழுவினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் 14 தொழிற்சங்கங்களில், சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம், இலங்கை வர்த்தகம், கைத்தொழில் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் [CMU], இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் மற்றும் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் ஆகியன, தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலையீட்டில் அகற்றப்பட்டது.
“அமைச்சர் இலகுவாக தொழிலாளர் சட்டங்களை மாற்றவே இந்த சங்கங்கள் நீக்கப்பட்டன. மாற்றப்படும் பல சட்டங்கள் தனியார் துறை ஊழியர்களைப் பாதிக்கின்றன,” என தொழிற்சங்கத் தலைவர் அண்டன் மார்கஸ் தெரிவிக்கின்றார்.
பெண்களின் பிரதிநிதித்துவம்
தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியிடத்தில் தொழில்துறை அமைதியை நிலைநாட்டும் நோக்கத்துடன் 1994ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு, 2021 ஆம் ஆண்டில், நவ சமசமாஜக் கட்சியின் இணைந்த தொழிற்சங்கமாக இருந்த ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் நியமிக்கப்பட்டதன் ஊடாக முதல்முறையாக பெண் பிரதிநிதித்துவத்தைப் பெற்றது.
“தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் போதுமான உறுப்பினர்கள் இல்லாததால் நான் நீக்கப்பட்டபோது பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு என்ன நடக்கும்? மறுபுறம், அமைச்சர் விரும்பினால், அவர் எந்தவொரு தொழிற்சங்கத்தையும் இந்தச் சபைக்கு நியமிக்கலாம்,” என ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஸ்வஸ்திகா அருலிங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தொழிலாளர் ஆலோசனைக் குழுவிற்கான பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், பாலின பாகுபாடு கருதப்படுவதில்லை எனவும் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.எம். விமலவீர ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தனியார் துறை ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழமையான தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை வர்த்தக, கைத்தொழில் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம், தொழில் அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, வருடாந்த மற்றும் மாதாந்த அறிக்கைகளை சமர்ப்பித்து, பிரதிநிதிகள் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களை நடத்தி கிளை சங்கங்களை முறையாக நிர்வகித்து வரும் தொழிற்சங்கத்தை தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்குவது நியாயமில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
“எமது கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கப்பட்ட நான்கு தொழிற்சங்கங்களை மீள்பரிசீலனை செய்வதாக செயலாளர் எழுத்து மூலம் எமக்கு அறிவித்துள்ளார்,” என CMU பிரதிச் செயலாளர் மஹிந்த அபேரத்ன கூறுகிறார்.
“பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பலவேகய, ஜனதா விமுக்தி பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அமைச்சருக்கு நட்பாக உள்ள ஏனைய சிறு சங்கங்களால் தொழில் அமைச்சரின் ஆலோசனைக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. சுயாதீன தொழிற்சங்கங்கள் அகற்றப்பட்டுள்ளன,” என CMU ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டுகிறார்.