தோட்டத் தொழிலாளர்களுக்கு ETF மற்றும் EPF வழங்குவதற்கான முன்மொழிவு ‘விரைவில்’

0
Ivory Agency Sri Lanka

அரசாங்க பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தை வழங்குவதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் தலைவர்களுக்கும் இடையில் அண்மையில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே அமைச்சர் ரமேஷ் பத்திரன இந்த உறுதிமொழியை வழங்கினார்.

இது தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஊடகச் செயலாளர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையில், 2002 ஆம் ஆண்டு முதல் அரச தோட்டக் கம்பனிகளில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களில் பலருக்கு ஊழியர் சேமலாப நிதி (EPF ) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியன செலுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்

நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று விசேட அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், உப தலைவர் பாரத் அருள்சாமி, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து, தொழிற்சங்க தேசிய அமைப்பாளர் லோகதாஸ், கட்சி போஷகர் சிவராஜா, தோட்ட கமிட்டி தலைவர்களும், ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்தின் சார்பில் அதன் நிறைவேற்று முகாமையாளர் வருண மற்றும் தோட்ட முகாமையாளர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்துக்கான காணிகளை சுவீகரிப்பதற்கும், தேயிலையை மீளப் பயிரிடுவதற்கும் இந்தக் கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments