அரச பயங்கரவாதத்தையும் இனவாதத்தையும் பயன்படுத்தி சிறுபான்மையினரை ஒடுக்கும் இந்திய பிரதமரிடமிருந்து
ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் நீதியைப் பெறக் கூடாது என கிழக்கு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
“இந்தியாவில் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் இனவாதக் கருத்துகளைக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் பேசும் மக்கள் கடிதம் அனுப்புவது இலங்கை முஸ்லிம்களை அவமதிக்கும் செயலாகும்.” என அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளினால் கல்முனையில் கடந்த ஜனவரி 4ஆம் திகதி நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.பஸ்மீர் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் வாழும் மக்களை கலந்தாலோசிக்காமல் வடக்கு, கிழக்கை இணைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டால் பாரிய முரண்பாடுகள் உருவாகும் அபாயம் இருப்பதாக பஸ்மீர் கருத்து வெளியிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், சிறந்த தலைவர் எனப் பின்பற்றுபவர்கள் எந்த ஒரு தீர்மானத்தை எடுக்காமல், கட்சியின் உயர்பீடத்தை கூட்டி இது குறித்து தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கை இணைக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காக இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள தமிழ் பேசும் கட்சிகளால் தயாரிக்கப்பட்ட ஆவணத்திற்கு இவ்வாறு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
“டிசெம்பர் 23ஆம் திகதி கூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் சபையில் அதற்கு ஆதரவான ஆவணத்தில் கையொப்பமிடுவதில்லை என தீர்மானித்தோம்” என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.அப்துல் மனாப் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த கூட்டு ஆவணத்தை ஆய்வு செய்வதற்கு கால அவகாசம் தேவை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தமிழ் பேசும் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபனத்திற்கு காரணமான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு அதன் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் தயாரித்துள்ள ஆவணங்களின் உள்ளடக்கம் குறித்து கிழக்கு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் மனாப் வலியுறுத்தினார்.
இரகசியமாக தயாரிக்கப்படும் ஆவணத்தில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல் கையொப்பமிட்டால், கிழக்கில் முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.