நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாற்பண்ணையாளர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பட்டிப் பொஙகல் தினத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
மயிலத்தமடு மற்றும் மாதவனை பால் பண்ணையாளர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் 126 நாட்களை கடக்கும், இன்றைய பட்டிப் பொங்கல் தினத்தில் (16), மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாகவும், யாழ்ப்பாணம் நல்லை ஆதினம் முன்பாகவும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஒன்றிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் செப்டெம்பர் 13ஆம் திகதி, மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது என மாவட்டத்தின் அப்போதைய செயலாளர் கமலாவதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து, செப்டெம்பர் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக தமிழ் பாற்பண்ணையாளர்கள் முதன் முதலாகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களுடன் ஒன்று கூடிய தமிழ் பால் பண்ணையாளர்கள், மாவட்டச் செயலாளரின் அலுவலகத்திற்கு எதிர்ப்புப் பேரணியாகச் சென்று மாவட்டச் செயலாளருடன் தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.
கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட ஜஸ்ரினா யுலேகா முரளிதரன், தான் புதிதாக நியமனம் பெற்ற விடயத்தை வலியுறுத்திய தோடு, பாற்பண்ணையாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வை வழங்குவதாக உறுதியளித்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பட்டிப் பொங்கலை கரி நாள் என சுட்டிக்காட்டிய பண்ணையாளர்கள், “அழிக்காதே அழிக்காதே பசுக்களை அழிக்காதே”, “வேண்டும் வேண்டும் மேய்ச்சல் தரை வேண்டும்”, “சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்று”,
“நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்து”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
பால் பண்ணையாளர்களின் தொடர்ச்சியானப் போராட்டத்தை வெளிப்படுத்தும் வண்ணம், மற்பானைகளில் ஒன்று முதல் 126 வரையிலான இலக்கங்களை இட்டு, கறுப்புப் பட்டியால் பானைய கட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
மட்டக்களப்பு பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வைக் கோரி யாழ்ப்பாணம் நல்லை ஆதினத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
மாடுகளை மேய்ச்சலுக்கு பயன்படுத்திய நிலத்தின் ஒரு பகுதியை சிங்கள விவசாயிகள் கையகப்படுத்தியுள்ளதாகவும் அதனால் தாம் கடும் நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பால் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மட்டக்களப்பு, மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் அமைந்துள்ள மேயச்சல் தரையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட அநுராதா யஹம்பத்தினால் 150 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். இந்த குடும்பங்கள் சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாரம்பரிய கறவை மாடுகளின் உரிமையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்ட 6,000 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தில், சிங்கள விவசாயிகள் 2,500 ஏக்கர் நிலப்பரப்பை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து விவசாயத்தில் ஈடுபடுவதாக பால் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதி அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பால் விவசாயிகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
126 நாட்களாக தொடரும் போராட்டத்தின் போது 250ற்கும் மேற்பட்ட மாடுகள் கொல்லப்பட்டுள்ளதாக மயிலத்தமடு, மாதவனை பால் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.