பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றுமொரு தமிழ் அரசியல் கைதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்த ராம் ஆறு வருட சிறைவாசத்தின் பின்னர் மட்டக்களப்புச் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளதாக கிழக்கு ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2009ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி திருகோணமலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, சர்ச்சைக்குரிய “ புனர்வாழ்வுத் திட்டத்தின் ” கீழ் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்பின் கீழ் அம்பாறை தம்பலவில் பகுதியில் விவசாயம் செய்து வந்த ராம், சாவகச்சேரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கியுடள் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு வெலிக்கடை மற்றும் மட்டக்களப்பு சிறைகளில் 6 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி, ஜூலை 20ஆம் திகதி தண்டனைக் காலம் நிறைவடைந்ததை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.