பயங்கரவாத பொலிஸாரின் விசாரணையால் பாதிக்கப்படும் தமிழ் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள்

0
Ivory Agency Sri Lanka

 

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டுப் போட்டியின்போது இல்லமொன்றின் அலங்காரம் தொடர்பாக, அதிபர், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களை பயங்கரவாத பொலிஸார் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதால் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் அடக்குமுறைக்கு உள்ளான சூழ்நிலையை விளக்கிய ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன், பொலிஸாரின் நடவடிக்கை தமிழ் சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்தை தடை செய்யும் வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்.

“கல்வி சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களை உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமே இது. அதனைவிட தமிழ்ச் சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுததும் விடயமாகவே இது அமைந்துள்ளது. இந்த நாட்டின் அரசாங்கம் தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே நடத்துகின்றது என்ற விடயத்தை இது வெளிக்காட்டுகிறது.”

இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவது குறித்து அறிவிக்கும் அரசு இவ்வாறு நடந்துகொள்வது கேலிக்கூத்தான விடயம் என ஆசிரியர் சங்கத் தலைமை வலியுறுத்துகின்றது.

14 மார்ச் 2024 அன்று, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின்போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான, இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, பாடசாலைக்கு வருகைத்தந்த கிளிநொச்சி தெற்கு கல்வி வலைய அலுவலக அதிகாரிகள், அதிபர், பிரதி அதிபர், உபஅதிபர், இல்ல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர்.

சுமார் ஒரு வாரத்தின் பின்னர், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் (CTID) கிளிநொச்சி, பரந்தன் பிரிவு அதிகாரிகள் பாடசாலைக்கு விஜயம் செய்து, பாடசாலை அதிபர், பிரதி அதிபர் மற்றும் சில ஆசிரியர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்ததாக ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் கூறுகிறார்.

அதற்கு அடுத்த தினம், பாடசாலையின் அதிபர், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பரந்தன் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு சுமார் 4 மணித்தியாலங்கள் இது தொடர்பாக விசாரைணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின், விநோத உடைப் போட்டியில் கலந்து கொண்ட இரண்டு மாணவர்கள் அவர்களது பெற்றோருடன் பயங்கரவாதப் பொலிஸ் பிரிவின் பரந்தன் பிரிவுக்கு வரவழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு அறிவித்ததையடுத்து, ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவு மற்றும் வடமாகாணக் கல்வித் திணைக்களத்திடம் இதுத் தொடர்பில் கேட்டறிந்ததாக இன்னாசிமுத்து சத்தியசீலன் குறிப்பிடுகின்றார்.

அதன் பின்னர், பயங்கரவாத பொலிஸ் விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், அந்த நாட்களில், அடையாளம் தெரியாத வாகனங்கள் பாடசாலையை அண்மித்து உலாவியதாகவும் அந்த வாகனங்கள் வட மத்திய மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

இந்த நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பரந்தன் பிரிவின் அதிகாரிகள், ஓகஸ்ட் 8ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு, ஓகஸ்ட் முதல் வாரத்தில் பாடசாலையின் பல ஆசிரியர்களுக்கு மீண்டும் அறிவித்துள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு மீண்டும் அறிவித்ததையடுத்து, அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலையிட்டமையால், வாக்குமூலமளிக்க வரத் தேவையில்லை என ஆசிரியர்களுக்கு பயங்கரவாத பொலிஸார் அறிவித்ததாக ஆசிரியர் சத்தியசீலன் குறிப்பிடுகின்றார்.

மீண்டும் ஓகஸ்ட் 13ஆம் திகதி காலை 7.30 மணியளவில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கிளிநொச்சி பரந்தன் பிரிவின் அதிகாரிகள் அன்றைய தினம் காலை 10 மணிக்கு பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்களை விசாரணைக்கு வருமாறு விடுத்த உத்தரவிற்கு அமைய, அவர்கள் சென்று வாக்குமூலம் அளித்தனர்.

கடந்த 14ஆம் திகதி இப்பாடசாலையின் விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான ஆசிரியரும் பரந்தன் பிரிவுக்கு அழைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன், பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் என்ன தவறு செய்தார்கள் என்பதை பொலிஸார் வெளிப்படுத்தவில்லை எனவும் வலியுறுத்துகின்றார்.

“இல்ல விளையாட்டுப் போட்டிகளின்போது நடைமுறையில் இருக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்திதான் இல்ல அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தென்னிலங்கையில்கூட இராணுவ கவச வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இது வெறுமனே நாங்கள் எங்கள் மண்ணில் நடந்த அவலங்களையும், நாங்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளையும் காட்சிப்படுத்துவது உங்களுக்கு பிரச்சினையாகக இருக்குமெனின், எங்களை எப்படி நடத்த விரும்புகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.”

தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் கலைத்துறை வெளிப்பாடுகளை சகித்துக்கொள்ள முடியாத சிங்கள மக்கள் தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும் தமிழ் மக்களின் மனநிலையை பற்றி நாம் சிந்திக்க வேண்டுமென ஆசிரியர் கேட்டுக் கொண்டார்.

“இப்படி இருக்கையில் நாங்கள் எப்படி இன நல்லிணக்கத்தைப் பற்றி சிந்திக்க முடியும். இதுவொரு கலை வடிவம். இதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனின், இதனை உண்மையிலேயே அனுபவித்த எங்கள் மனநிலையை கொஞ்சம் சிந்தியுங்கள்.”

பயங்கரவாதப் பொலிஸாரின் நடவடிக்கைகள் மூலம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகள் மீறப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள மாணவர்கள் தமது படைப்புகளை வெளிப்படுத்தக்கூட உரிமை இல்லையா? என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

Facebook Comments