கடும் மழையை பொருட்படுத்தாமல் பொலிஸாருக்கு எதிராக போராட்டம்

0
Ivory Agency Sri Lanka

புதிய வருடத்தில் வன்னிக்கு வருகைத்தந்த ஜனாதிபதியை சந்திக்க முற்பட்ட போது, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களைக் கண்டறியும் போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழ்த் தாயின் விடுதலையை வலியுறுத்தி வன்னியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கங்களின் தாய்மார், ஜனவரி 8ஆம் திகதி திங்கட்கிழமை முல்லைத்தீவு புனித பேதுரு தேவாலய முன்றலில் ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்து மாவட்டச் செயலாளர் அலுவலகம் வரை சென்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவியின் விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நான்கு நாள் பயணமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனவரி 5 வெள்ளிக்கிழமை, வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்து நகர மண்டபத்திற்கு அருகில் வந்தவேளை பொலிஸார் தடுத்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் வவுனியா மாவட்ட செயலாளர் சிவானந்தன் ஜெனிற்றா வவுனியா நகர மண்டபத்திற்குள் செல்ல முற்பட்டபோது, அவரையும் நிகழ்வில் கலந்து கொண்ட மீரா ஜஸ்மின் சார்லஸ்னைஸையும் பொலிஸார் கைது செய்தனர்.

இருவரையும் அன்றைய தினம் பொலிஸார் வவ்னியா நீதவான் முன்னிலையில் முற்படுத்தியபோது, மீரா ஜஸ்மின் சாள்ஸ்னாய்ஸை பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான் சிவானந்தன் ஜெனிற்றாவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டங்கள் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில், சிவானந்தன் ஜெனிற்றாவுக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த தமிழ் தாய்மார்கள், அப்பகுதியில் பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல், பொலிஸாரின் அராஜகத்தை நிறுத்துமாறும் ஜெனிதாற்றாவை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தினர்.

“பாதிக்கப்பட்ட உறவு ஜெனிற்றாவை விடுதலை செய், சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு, ரணில் அரச, நட்டஈடு வழங்கி போராட்டங்களை நிறுத்தலாம் கனவு காணாதே,” போன்ற கோசங்களை எழுப்பியும், பதாதைகளைத் தாங்கியவாரும் தமிழ்த் தாய்மார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரும் போராட்டத்தை 2,500 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் தாய்மார், பதினான்கு வருடங்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள தமது அன்புக்குரியவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு ஒரே குரலாக கோரிக்கை விடுத்துள்ளனர்

Facebook Comments