பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஒரு முன்னாள் ஆயுதக் குழு தயார்

0
Ivory Agency Sri Lanka

 

ஆயுதம் ஏந்திய அனுபவம், புதிய ஜனாதிபதியால் உருவாக்கப்படவுள்ள எதிர்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான தகுதியாக தமிழ் துணை இராணுவக் குழுவின் தலைவர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் என்ற அடிப்படையில் நல்ல புரிந்துணர்வு இருப்பதாக முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“தேர்தல் முடிந்த பின்னர், அந்த வெற்றிக்கு பின்னர் ஆட்சியில் இருக்கின்றவர்களோடு கலந்துரையாடி, ஏனென்றால் அவர்களும் உங்களுக்குத் தெரியும் ஒரு ஆயுத போராட்டத்தின் ஊடாகத்தான் இன்று தேசிய நீரோட்டத்தில் ஜனநாயக வழிக்கு வந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். அதேபோல் நாங்களும் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். கொள்கை எனப் பார்க்கையில் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் கொள்கையில் வேறுபாடுகள் இல்லை. அதாவது அவர்கள் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவர்கள். ஈபிடிபியும் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தது. அந்த வகையில் எங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு இருக்கின்றது.”

டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் ஆகியோர் மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த 2004 இல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் பின்னர் புதிய அரசாங்கத்துடன் இணையும் சாத்தியம் குறித்தும் ஈபிடிபி தலைவர் அதிக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“தேர்தலுக்கு பின்னர், இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் ஈபிடிபியின் வீணை சின்னத்தின் வெற்றியின் பின்னர் நிச்சியம் அது நிறைவேறும் என்பதை கூறிக்கொள்கிறேன்.”

அரசாங்கத்திற்கு ஆதரவான ஆயுதக் குழுவாக செயற்பட்ட ஈ.பி.டி.பிக்கு எதிரான கடத்தல், சித்திரவதை, கப்பம் பெறுதல், கொலை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை எந்த அரசாங்கமும் விசாரிக்கவில்லை.

அந்த கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா 1994 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments