அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக மக்களின் வெறுப்புக்கு உள்ளான ராஜபக்ச அரசாங்கம் சிங்கள பௌத்த பாரம்பரியத்தை தேடி வடக்கில் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் குழுவினருடன் அண்மையில் யாழ்ப்பாணம் காரைநகர் வேரப்பிட்டி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
அரசாங்கத்தின் முயற்சிகள் சிங்கள எதிர்ப்பை அடக்கும் முயற்சியாக மாகாண அரசியல்வாதிகளால் இந்த விடயம் கண்டிக்கப்பட்டது.
”கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்து மக்கள் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்களை தவறாக வழிநடத்தி தமிழர் பிரதேசங்களில் சிங்கள பௌத்த தொன்மை வாய்ந்த காணிகள் காணப்படுவதாக தெரிவித்து அதனை அபகரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.” என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார்.
வேரப்பிட்டி கிராமத்தில் உள்ள கணேசா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள பகுதியில் பல இடிபாடுகள் காணப்படுப்படுவதாகவும், பாடசாலைக் கட்டிடத்தின் வலதுபுறம் தரையில் சுமார் 15 மீட்டர் விட்டத்தில் 2 மீட்டர் ஆழத்திற்கு தோண்டப்பட்ட இடத்தில் ஆறு அஸ்திவாரங்கள் சிதறிக் கிடப்பதாகவும், கட்டிடத்தின் கிழக்கே மைதானம் முழுவதும் பழைய ஓடுகள்
மற்றும் ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளிட்ட பல பொருட்கள் காணப்படுவதாகவும் தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறித்த இடத்தின் அகழ்வாராய்ச்சியை துரிதப்படுத்தி அதன் வரலாற்று முக்கியத்துவத்தை கண்டறியும் வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு தொல்பொருள் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் விக்கிரமநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் தொல்லியல் துறை, அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் செயற்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைச்சர் விக்கிரமநாயக்கவின், காணிகளை கைப்பற்றும் செயற்பாடுகளுக்கு, ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆதரவளிப்பதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“தமிழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் இடங்களை கைப்பற்றுவதில் ஒன்றுதான் தொல்லியல் துறையும். அமைச்சர் மற்ற அனைத்து பிரச்சினைகளையும் புறந்தள்ளிவிட்டு சிங்கள பௌத்த கலைப்பொருட்களை தேடி வடக்கிற்கு வருகிறார்.
இவற்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் ஆதரவளிப்பது வெட்கக்கேடானது. அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கூட சிங்கள பௌத்த ஆதிக்கத்தைப் பரப்புவதற்கு ஆதரவளிக்கவில்லை. அங்கஜன் இந்த முட்டாள்தனத்தை நிறுத்த வேண்டும்.” என அவர் கேட்டுக்கொண்டார்.
முல்லைத்தீவு குருந்தூர்மலை சிவன் ஆலயம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்துக்களால் வழிபடப்பட்டு வரும் நிலையில், புத்தர் சிலையை வைத்து அதனை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின்போது, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கும் தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.