பதினைந்து வருடங்களுக்கு மேலாக இராணுவத்தால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வன்னியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணியை அளவீடு செய்ய வருகைத்தந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகளை போராட்டம் நடத்தி பின்வாங்க வைப்பதில் உள்ளூர் தமிழர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
தமது முகாமுக்கு அருகில் அமைந்துள்ள அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தை இலங்கை இராணுவத்தின் 23ஆவது சிங்கப் படைப்பிரிவு ஆக்கிரமித்துள்ளதாகவும், ஜனவரி 18ஆம் திகதியான நேற்றைய தினம் காணியை அளவீடு செய்ய வந்த நில அளவையாளர்களை மக்கள் பின்வாங்கச் செய்ததாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சொந்தமான சுமார் நான்கு ஏக்கர் காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 14 கிராம மக்கள் முல்லைத்தீவு நில அளவையாளர்களிடம் கையொப்பமிட்ட கடிதத்தை வழங்கியுள்ளனர்.
“இந்த இடம் எமது உறவினர்கள் அடக்கம் செய்த இடமாகும். இந்த நிலத்தை அளவீடு செய்வதற்கோ, கையகப்படுத்துவதற்கோ நாங்கள் சம்மதிக்கமாட்டோம். எனவே, இந்த காணியை அளவீடு செய்ய வேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்” என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 800 விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 23வது சிங்கப் படைப்பிரிவினர் தமது தளத்திற்கு அருகில் அமைந்துள்ள அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தை இழிவுபடுத்தும் வகையில் செயற்படுவதாக கடந்த காலங்களில் பல தடவைகள் உள்ளூர் தமிழர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தை உடனடியாக விடுவிக்குமாறு அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.