போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்துள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத்தை குறைப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமது அரசாங்கத்தின் கீழ் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை துன்புறுத்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
இது உங்கள் அனைவருக்கும் நடக்கப் போகிறது, உங்கள் பிள்ளைகளுக்கும் நடக்கும் என்பதை பொலிஸார், இராணுவத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்.
எனினும், பீல்ட் மார்ஷலும் இராணுவ பலத்தைக் குறைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
“ஜனாதிபதி பாதுகாப்பு உத்தியை மீளாய்வு செய்வதாகக் கூறியதைக் கண்டோம். எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. 2002ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாண தளபதியாக இருந்தபோது. அப்போதும், தான் பாதுகாப்பு உத்தியை பரிசீலனை செய்வதாகக்கூறி, இராணுவத்தின் பலத்தை குறைக்க முயன்றனர். எனினும் அப்போது தாம் இராணுவத்தை குறைக்கவில்லை, தேவையான அளவுக்கு இராணுவத்தை வரையறுக்கின்றோம் என்றார்கள். அந்த விடயங்கள்தான் இவர்களின் தலையில் எப்போதும் இருக்கும். மீண்டும், முப்படைகள், இராணுவம் மீது கைவைக்கும் திட்டமே இது.”
ஒடுக்கப்படும் இளைஞர்களை காப்பாற்ற முன்வருமாறு நாட்டின் சட்டத்தரணி சமூகத்திடம் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா நாடாளுமன்ற உறுப்பினர் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச பயங்கரவாதம்
இலங்கை அரச பயங்கரவாதம் செயற்படும் நாடாக இருப்பதால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.
“இந்த அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரையில் ஒரு சதத்தைக் கூட இந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்.”