மே 9 தாக்குதல், பாதுகாப்பு செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கேள்விகள்

0
Ivory Agency Sri Lanka

மே 9ஆம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச சகோதரர்களை இராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர், அலரிமாளிகையில் முன்னாள் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களை பொலிஸார் சரியாக உறுதிப்படுத்தவில்லை.

சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க போதுமான பாதுகாப்பை வழங்குவதன் மூலம் சட்டத்தின் ஆட்சியைப் பேணுவதற்கு உழைத்தார்களா என்பது பற்றிய பரிந்துரைகளை வழங்கியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அந்தத் தோல்விக்கான பொறுப்பை பாதுகாப்புச் செயலாளரின் கீழ் உள்ள அரச புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளது.

மே 9 வன்முறைத் தாக்குதலுக்கு முன்னர், அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் தலைமையிலான கும்பல், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதோடு, அங்கு அமைச்சர்கள் நிகழ்த்திய ஆத்திரமூட்டும் பேச்சுகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகள் அலரி மாளிகையில் பேசும் பேச்சுக்களை பொலிஸாரால் சரியாகச் சரிபார்க்க முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த முக்கியமான தகவல்களைப் பெறத் தவறியமை பாதுகாப்புச் செயலாளரின் கீழ் உள்ள அரச புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது.” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் ரோகினி மாரசிங்க மற்றும் ஆணையாளர் அனுசுயா சண்முகநாதன் ஆகியோர் கையொப்பமிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட குழுவொன்றை நியமித்து விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மத்தியில் அரச புலனாய்வுப் பிரிவினர் பணிக்கு அமர்த்தப்பட்டதை விசாரணைப் பரிந்துரைகள் வெளிப்படுத்துகின்றன.

“புலனாய்வு அறிக்கைகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தாலும், அவை பல தகவல் ஆதாரங்களில் ஒன்றாகும். ஏனையவை நேரலை மற்றும் நேரடி தகவல்களாகும் (அதாவது பல்வேறு பங்கேற்பாளர்கள் மற்றும் தகவலறிந்தவர்களின் தகவல்கள் உட்பட), மற்றும் சிசிரிவி காட்சிகள் போன்றவை” என ஓகஸ்ட் 23ஆம் திகதி வழங்கப்பட் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 9ஆம் திகதி, இரவு 11.50 முதல் நள்ளிரவு 1 மணிவரை, பொலிஸ் மா அதிபர் மற்றும் அவருக்கு கீழ் பணிபுரிபவர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்களையும் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்களையும் ஆராய குழுவொன்றுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதோடு, இதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பைப் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழு எதுவென தெளிவாகத் தெரியவில்லை.

பொலிஸ் தலைமையினால் (பொலிஸ் மா அதிபர் மற்றும் உயர் அதிகாரிகள்) பெறப்பட்ட அனைத்து தகவல்களையும் தொடர்ச்சியாக பகுப்பாய்வு செய்யும் நடைமுறை இருக்க வேண்டுமென சுட்டிக்காட்டிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சாத்தியமான தாக்குதலுக்குத் தயார்படுத்துவதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அதிகாரிகளுக்குப் பெற்றுக்கொடுக்கும் முறையை காவல்துறை கொண்டிருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

களத்தில் இருந்த கட்டளைத் தளபதி எந்த தீர்மானத்தையும் எடுக்காமையே மோதலுக்கு முக்கிய காரணம் என நீதிபதி ரோஹினி மாரசிங்க மற்றும் ஆணையாளர் அனுசுயா சண்முகநாதன் ஆகியோரால் வழங்கப்பட்ட பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாமல் மோதலை ஏற்படுத்தும் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க தேவையான அடிப்படை வழிமுறைகளைப் பயன்படுத்த பாதுகாப்புப் படையினர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழு கூடியுள்ளது

“உண்மையில் கட்டளையிடும் அதிகாரி மற்றும் அந்த அதிகாரிக்கும் தரையில் உள்ள கட்டளையிடும் அதிகாரிக்கும் இடையிலான உறவையும் குழுவால் அடையாளம் காண முடியும். கட்டளையிடும் அதிகாரி தாக்குதலைத் தவிர்க்க முடிவெடுக்க முடியுமா. களத்தில் உள்ள அதிகாரி முடிவெடுக்காததுதான் மோதலுக்கு அடிப்படைக் காரணம். எது யாரால் தடுக்கப்பட்டது? அதனை ஆராய்வது முக்கியம். காலி வீதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில் காலி வீதியின் குறுக்கே இரும்பு தடுப்புகளை அமைக்காததன் காரணம் என்ன? “துரதிர்ஷ்டவசமாக, தவிர்க்க முடியாமல் மோதலுக்கு வழிவகுக்கும் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க இந்த அடிப்படை நடவடிக்கைகளை வழங்க குழு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.”

எவ்வாறாயினும், பெயரிடப்படாத ‘குழு’ பல நாட்கள் கூடி பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டத்தை அமுல்படுத்தும் திணைக்களத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் சட்ட மீறல்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காணவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் கடமை மீறல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் குழுவொன்றை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

“சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முழு அமைப்பையும் விசாரணை செய்யும் பொறுப்பை ஜனாதிபதி குறித்த குழுவிடம் ஒப்படைக்கலாம் என மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் பரிந்துரைக்கிறது. பொறுப்பைக் கண்டறிந்து, அத்தகைய அதிகாரிகளை தண்டிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆணைக்குழு பரிந்துரைக்கிறது.”

பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், இராணுவத் தளபதி, அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பல அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் அனைத்து ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகளும் விசாரணைக்காக அழைக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Facebook Comments