உடலில் கிருமி நாசினிகளை தெளிப்பது “சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு முரணானது”

0
Ivory Agency Sri Lanka

பொது இடங்களை சுத்தப்படுத்தும் நோக்கில் கிருமி நாசினிகளை தெளிப்பதால் அவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரித்துள்ள, இலங்கையின் விஞ்ஞானிகள் குழு ஒன்று, மாறாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படமாட்டாது என, உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பொது இடங்களில் மக்கள் உள்நுழைதல் மற்றும் வெளியேறுதல் என்பன கிருமி நீக்கம் செய்யப்படும் அறைகள் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கும், இலங்கை நுண்ணுயிரியல் கல்லூரி, மக்கள் மீது, குளோரின் கலவைகள், சவர்க்கார நீர் உள்ளிட்ட புற ஊதா கதிர்களை ஏற்படுத்தும் திரவங்கள் தெளிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த செயன்முறை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை என உலக சுகாதார ஸ்தாபனத்தை மேற்கோள் காட்டி அறிவிப்பு வெளியாகியிடப்பட்டுள்ளது.

“எந்தவொரு சூழ்நிலையிலும் தனிநபர்கள் அல்லது குழுக்கள் மீது ”தெளிக்கும்” செயற்பாட்டை அனுமதிக்க முடியாது என்பதை உறுதியாக வலியுறுத்துகிறோம். ஒரு நபர் அல்லது குழுவின் மீது கிருமி நீக்கும் இரசாயன தெளிப்பான்களை தெளித்தல் உடல் மற்றும் உளவியல் ரீதியாக தீங்கு விளைவிக்கும் என்பதோடு, அது கொரோனா தொற்று கட்டுப்படுத்தாது. ஒரு நபரின் வெளி உடம்பிற்கு கிருமி நீக்கும் தெளிப்பான்களை தெளிப்பதால், உடலுக்குள்ளே காணப்படும் கிருமிகள் அழிக்கப்படாத அதேவேளை, குறித்த நபரின் உடல்நலம் மேலும் மோசமடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்” என குறித்த கல்லூரி வலியுறுத்தியுள்ளது.

கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை தொடுவதால் வைரஸ் தொற்றும் அபாயம் காணப்படுவதால், முழு உடலையும் கிருமி நீக்கம் செய்வதைவிட, கைகளை கிருமி நீக்கம் செய்வதே கொரோனா தொற்றை தடுக்க சிறந்த வழி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சோதனை அறைகளில் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவது தீப்பற்றும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதோடு, இந்த இரசாயனங்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

”குளோரின் தெளிப்பு கண்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், அத்துடன் மூச்சுத்திணறல், வாந்தி, சுவாச பிரச்சினைகனை ஏற்படுத்தும். மேலும், நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும், வலிப்பு போன்ற தாக்கங்களும், நாள்பட்ட சுவாச நோய்களை அதிகப்படுத்துகிறது மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடும் உடலின் திறனை பாதிக்கும்.” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற ஊதா ஒளிக் கதிர்கள் அதிகமாக வெளிப்படுத்துவதால் கண்கள், தோல் தீக்காயங்கள் மற்றும் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு, ஓசோன் வாயு அல்லது கதிரியக்க தயாரிப்புகளைக் கொண்டு, உயிரற்ற பொருட்களை சுத்தப்படுத்துவதற்கோ, தயாரிப்புகளை வெளியிடுவதற்கோ அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அங்கீகாரம் வழங்கவில்லை.

கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கையானது, பொதுமக்கள் அடிக்கடி தொடக்கூடிய, கதவு பூட்டுகள், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆசனங்கள், மின்தூக்கி பொத்தான்களில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், நுண்ணுயிரியல் கல்லூரியின் பரிந்துரைத்துள்ளது.

வைரஸ் அத்தகைய அழுக்குபடிந்த மேற்பரப்பில் பல மணிநேரம் அல்லது பல நாட்கள் கூட வாழக்கூடும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரிய அளவிலான கிருமிநாசினி மருந்துகளை சுற்றுச்சூழலுக்கு வெளியிடுவதானது, மாசு மற்றும் இராசாயன தாக்கத்தை ஏற்படுத்துவது மாத்திரமல்லாமல், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், மீன்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.

மேலும், மேற்பரப்பில் மேற்கொள்ளப்படும் கிருமிநீக்கும் நடவடிக்கை, எவ்வளவு தூரம் செயல்திறன் உடையது என்பது இதுவரை அனுமானிக்கப்படவில்லை என்பதோடு, சூரிய ஒளி போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால் கிருமிநாசினிகளின் தாக்கம் குறைவதற்கும் வாய்ப்புகள் காணப்படுகிறது.

எனவே, கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி வீதிகள் மற்றும் பொது இடங்களில் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதைவிட, பொதுமக்கள் அடிக்கடி தொடும் இடங்கைளை சுத்தப்படுத்தும் செயற்பாட்டை பரிந்துரைப்பதாக, இலங்கை நுண்ணுயிரியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Facebook Comments