விடைகளுடன் வழங்கப்பட்ட வினாத்தாள், 30 தமிழ் பாடசாலைகளின் மாணவர்கள் பாதிப்பு

0
Ivory Agency Sri Lanka

நுவரெலியா மாவட்டம் வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூல அரச பாடசாலைகளில் இன்று இடம்பெற்ற சித்திரக்கலை பரீட்சையின்போது வினாத்தாளுடன் விடைகளும் இணைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து மாணவர்களும், ஆசிரியர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

கொவிட் தொற்று காரணமாக கடந்த வருடம் டிசம்பரில் நடத்தப்பட வேண்டிய ஆண்டிறுதிப் பரீட்சைகள் வலப்பனை கல்வி வலயத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய தரம் 6 தொடக்கம் 11ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கான பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த வகையில் தரம் 10 மாணவர்களுக்கான சித்திரக்கலை பரீட்சை நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த பரீட்சைக்கான வினாத்தாளை வலப்பனை கல்வி வலயம் தயாரித்துள்ளதோடு, வினாத்தாளுடன் விடைகளும் இணைத்தே அச்சிடப்பட்டுள்ளன.

நேற்று காலை பரீட்சைக்கான வினாத்தாள் பொதியை பிரித்தபோதே பரீட்சைக்கு பொறுப்பான ஆசிரியர்களுக்கு இந்த விடயம் தெரியவந்துள்ளதோடு, விடைத்தாளை அகற்றி வினாக்கள் மாத்திரம் அடங்கிய பகுதியை மாணவர்களுக்கு வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த பரீட்சை வினாத்தாள் நான்கு பக்கங்களை கொண்டிருந்ததோடு, ஒரு பக்கத்தில் விடைகள் அச்சிடப்பட்டுள்ளன.

குறித்த விடைத்தாள் பரீட்சை வினாத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கானது என்பதோடு இது வழமையாக தனியாக அச்சிடப்பட்டே வழங்கப்படும்.

எனினும் இந்த தடவை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளின் கவனயீனம் காரணமே இந்தத் தவறு இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் நேற்று மாணவர்களுக்கு வழங்கப்பட்ட குறித்த சித்திரக்கலை வினாத்தாளில் காணப்படும் புகைப்படம் தெளிவில்லாமல் காணப்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனைவிட தற்போது இடம்பெற்று வருவது கடந்த வருடம் நடத்தப்பட வேண்டிய பரீட்சை எனவும், எனினும் வினாத்தாளில் ஆண்டிறுதிப் பரீட்சை 2022 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தவறும் அதிகாரிகளின் கவனயீனத்தாலேயே இடம்பெற்றுள்ளதாகவும் ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை, இன்று இதே கல்வி வலயத்தில் இடம்பெற்ற தரம் 10 மாணவர்களுக்கான வணிகமும் கணக்கீட்டு கல்வியும் பரீட்சையின்போது, தரம் 11 மாணவர்களுக்கான பாடவிதானத்தில் உள்ள கேள்வி உள்ளடக்கப்பட்டிருந்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் தரம் 10 மாணவர்களுக்கான வணிகமும் கணக்கீட்டு கல்வியும் பரீட்சையில் 20 புள்ளிகளுக்கான 10 கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலையும் ஏற்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

பரீட்சைக்கு பொறுப்பான அதிகாரிகள், ஆசியர் ஆலோசகர்கள் என பல பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றுகின்ற போதிலும் அவர்களின் பொறுப்பற்ற செயலால் இந்த தவறு இடம்பெற்றுள்ளதாக ஆசிரியர்களும், மாணவர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வலப்பனை கல்வி வலயத்தில் சுமார் 30 தமிழ் மொழி மூல அரச பாடசாலைகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2022ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு, கடந்த வருடம் பாடசாலை, வலய மற்றும் மாகாண மட்ட பரீட்சைகள் நடைபெறவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.

2022 மாகாண மட்ட பரீட்சை மாத்திரமே நடைபெறும் நிலையில் அவர்கள் தேசிய பரீட்சைக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Facebook Comments