ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அரசாங்கத்தின் உயர்மட்ட பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளில் பலரின் தகுதிகளை கேள்விக்கு உட்படுத்திய அறிக்கையொன்று சர்வதேச பார்வைக்கு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
யஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்ததால் வெளியிடப்பட்ட பிந்திய அறிக்கையில், கோட்டாபய ராஜபக்ஸ தனது புதிய அரசாங்கத்தில் நியமித்துள்ள உள்வட்ட அதிகாரிகளை, யுத்தக் குற்றங்கள் மற்றும் முன்னர் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அதிகாரிகளின் அதிர்ச்சி தரும் தொகுப்பு என கூறியுள்ளது.
இராணுவத் தளபதி, பாதுாகாப்பு படைகளின் பிரதானி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி உள்ளிட்ட பதவிகளில் கோட்டாபய ராஜபக்ஸவின் கஜபா ரெஜிமெண்டைச் சேர்ந்த ஆறு ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான விளக்கப்படம் மூலம் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் பகிரங்கப்படுத்தியுள்ளது.
தற்போதைய இராணுவத் தளபதி உள்ளிட்ட கஜபா ரெஜிமெண்டைச் சேர்ந்த இரண்டு ஜெனரல்கள் 1989 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஸவின் நேரடி கட்டளையின் கீழ் பணியாற்றியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஸ, மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த காலப் பகுதியில், இராணுவ மற்றும் பொலிஸ் தடுப்புகாவலில் இருந்த குறைந்தது ஏழுநூறு சிங்களவர்கள் காணாமல் போனதாக உத்தியோகபூர்வ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாரைப் போன்று இரண்டாவது மிகப் பெரிய மனிதப்புதைகுழி மாத்தளை விஜய வித்தியாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1989 மற்றும் 2009 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொலை செய்த சம்பவங்களைப் போன்று ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட வேண்டிய பல இராணுவ அதிகாரிகள் ஒன்றிணைந்து ஸ்ரீலங்காவை நிர்வகிப்பதாகவும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா தீர்மானம் தொடர்பில் ஸ்ரீலங்கா மீது பாரிய எதிர்பார்ப்புடன் சர்வதேச சமூகம் முதலீடு செய்திருந்தது.
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சீர்திருத்தங்களும் அதில் உள்ளடங்கியிருந்தது.
இவ்வாறான இராணுவ கட்டளைத் தளபதிகள் அதிகாரத்தில் இருக்கும் போது அவர்கள் தொடர்பான மனித உரிமைகள் பதிவுகள், அரசாங்க அதிகாரிகள் இந்த நாட்டில் மீளாய்வு மற்றும் வடிகட்டல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படாது என்பது வெளிப்படை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த செயற்பாடுகளின் விழுமியங்களை நிலைநிறுத்தும் கடப்பாடு ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவளித்த உறுப்பு நாடுகளுக்கு உள்ளதாக யஸ்மின் சூக்கா கூறியுள்ளார்.
அறிக்கை, விளக்கப்படங்கள் மற்றும் அதிகாரிகளின் தகவல்கள் அடங்கிய ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது.