இலங்கை நாடாளுமன்றத்தின் பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான உள்ளக விசாரணையின் வெற்றி குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மகளிர் மன்றத்தின் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன, நாடாளுமன்றத்தின் நிர்வாகப் பிரிவு பெண்களிடமிருந்து முறைப்பாடுகளை மீளப் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
“இவ்வாறு பாலியல் தொல்லைகள் இடம்பெறவில்லையென அச்சுறுத்தி கடிதங்களில் கையெழுத்து பெறப்படுகின்றன ஆகவே இந்த விசாரணை சரியாக இடம்பெறுமா என அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.”
சில மேலாளர்களால் இந்தப் பெண்களுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹனதீரவினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பணிப்பாளர் (நிர்வாகம்) ஜி. தச்சன ராணி தலைமையிலான இந்தக் குழுவில் ஹன்சார்ட் ஆசிரியர் சி.என்.எல்.டி சில்வா மற்றும் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) இந்திரா திஸாநாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பொதுச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.