சிரேஷ்ட தொழிற்சங்க தலைவரும் இலங்கை தொழிலாளர் இயக்கத்தின் இடதுசாரி செயற்பாட்டாளருமான லீனஸ் ஜயதிலக காலமானார்.
தொழிற்சங்கங்களின் ஐக்கிய சம்மேளனம் மற்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான லீனஸ் ஜயதிலக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறையியலில் கலாநிதிப் பட்டதாரியான லீனஸ் ஜயதிலக, கத்தோலிக்க திருச்சபையில் பணியாற்றாமல் இடதுசாரி அரசியலைத் தேர்ந்தெடுத்து, பேராசிரியர் விக்கிரமபாகு கருணாரத்ன பிரதம செயலாளராக பதவி வகிக்கும், நவ சமசமாஜக் கட்சியி தொழிற்சங்கப் பிரிவுக்குப் பொறுப்பான செயலாளராக நீண்ட காலம் பணியாற்றினார்.
1983 ஜூலையில் ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கத்தின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழின விரோத இனப்படுகொலையுடன் இணைந்தாக, நவசமசமாஜக் கட்சி, ஜேவிபி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடையை நீக்குவதற்கு மறைந்திருந்து மக்கள் இயக்கத்தை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்காற்றினார்.
தமிழர் விடுதலைப் போராட்டம் மீதான அதன் நிலைப்பாடு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான நெருங்கிய அரசியல் தொடர்பு ஆகியவற்றில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக நவசமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற இடதுசாரிக் குரல் அமைப்பை உருவாக்குவதில் லீனஸ் ஜயதிலக முக்கியப் பங்காற்றினார்.
மறைந்த லீனஸ் ஜயதிலகவின் பூதவுடல் 2022 மே 12 வியாழன் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் பாலா தாம்பு மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
பிரியாவிடை நிகழ்வு மாலை 3 மணிக்கு நடைபெறும் என வர்த்தக மற்றும் கைத்தொழில் தொழிலாளர் சங்கத்தின் அறிவித்துள்ளது. பூதவுடல் 222, சென் மேரிஸ் வீதி, உஸ்வெட்டகேயாவ என்ற முகவரியில் அமைந்துள்ள வீட்டுக்கு பிற்பகல் 4 மணியளவில் எடுத்துச் செல்லப்படும்.
இறுதிக்கிரியைகள் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு உஸ்வெட்டகேயாவ பொது மயானத்தில் நடைபெறும்.