ஜனாதிபதி செயலகம் மே மாத சம்பளத்தை கோரியுள்ளமை அதிகார துஷ்பிரயோகம் என குற்றச்சாட்டு

0
Ivory Agency Sri Lanka

ஜனாதிபதியின் செயலாளரால் வெசாக் போயா தினத்திற்கு முதல் நாள் நிறுவனப் பிரதானிகளை அழைத்து அரச ஊழியர்களின் மாத சம்பளத்தை கோரியுள்ளதன் மூலம் அரச அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்வதற்கு அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னணி தொழிற்சங்க தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதி, உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பை பயன்படுத்தி விடுத்துள்ள இந்தக் கோரிக்கை முழுமையான பொதுத்துறைக்கு அச்சுறுத்தல் என இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களும் இந்த பணியில் பங்குபற்றுவதை ஊக்குவிப்பேன். நீங்களும் அதேபோன்று உங்கள் அலுவலக பணியாளர்களும் இந்தப் பணிக்கு பங்களிப்பு வழங்க நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகின்றேன் என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தரவினால் மே மாதம் 5 ஆம் திகதி அனுப்பட்டுள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

நாட்டின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை குறைத்தல் மற்றும் கடன் முகாமைத்துவத்தின் பொருட்டு இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி செயலாளரினால் அனுப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம், அரச ஊழியர்கள் கடந்த நாட்களில் பயண செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகள் குறைந்துள்ளதாக கூறியுள்ள போதிலும் நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பெருந்தொகை பணத்தை செலவிட வேண்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

 

சம்பளப் போராட்டங்கள் மீதான அழுத்தம்

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள கோரிக்கை, அரச துறைகளில் சம்பள போராட்டங்கள் மீது அழுத்தத்தை பிரயோகிப்பது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அந்த சங்கத்தினால் மே மாதம் 6 ஆம் திகதி வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம், ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கை கோவிட் 19 போர்வையில் ஸ்தம்பித்துள்ள ஆசிரியர் – அதிபர் சம்பளப் போராட்டம் உட்பட அரசாங்க துறையிலுள்ளவர்களின் சம்பளப் போராட்டத்தை பாதிக்குமா என்பது குறித்து ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

அனைத்து அரச ஊழியர்களினதும் மே மாதச் சம்பளத்தை நன்கொடையாக கோருவதன் மூலம், கோவிட் 19 தொற்று காரணமாக நிறுத்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் – அதிபர்கள் சம்பள முரண்பாட்டை நீக்குதல் மற்றும் சம்பள உயர்வு போராட்டங்கள், தபால்,ரயில்வே, பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்களின் சம்பளப் போராட்டங்கள் எதிர்காலத்தில் தோன்றுவதை தடுப்பதற்கான ஒரு தந்திரோபாயமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

நிலவும் சூழ்நிலையில், வெளிநாட்டு உதவிகள் பெறப்பட்டு, மசகு எண்ணைய்யின் விலை மிகக் குறைவாக இருக்கும் நிலையில், அரச ஊழியர்களின் சம்பளத்தை கோருவதன் பின்புலத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக காண்பிக்க அரசாங்கம் ஷ முயற்சிக்கின்றதா எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கோவிட் 19 தொற்றினால் அரச ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள அழுத்தங்களை குறைக்கும் வகையிலேயே மிகவும் குறைந்த சம்பளத்தைப் பெற்று கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கும் அரச ஊழியர்களின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான கடன் தவணை செலுத்த வேண்டாம் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த சலுகை, ஏப்ரல் மாத சம்பளத்தில் ஆசிரியர்கள் – அதிபர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களில் பலருக்கு கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சலுகையின் காரணமாக ஏப்ரல் மாதம் செலுத்த வேண்டிய கட்டணத்தை அரச ஊழியர்கள் இழந்ததாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் நினைவூட்டியுள்ளது.

அரச ஊழியர்களின் கஷ்டங்களை அடையாளம் கண்ட 07/2020 பொதுநிர்வாக சுற்றறிக்கை, குறைந்தபட்ச நிவாரணமாக அமைந்துள்ள நிலையில், மறுபுறம் அவர்களின் மே சம்பளம் அல்லது அதில் பங்கு கேட்பது சிக்கலானது எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஜோசப் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Facebook Comments