ஸ்ரீலங்காவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சட்டத்தரணிக்கு பிணை வழங்குவதில் தமது தரப்பில் எதிர்ப்புகள் இல்லை என ஸ்ரீலங்கா சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.
விளக்கமறியலில் உள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீதான வழக்கு விசாரணை கடந்த 28ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில், பிணை கோரப்படுவதற்கு தமது தரப்பில் எதிர்ப்புகள் இல்லை என சட்ட மா அதிபரால் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் மிக மோசமான சட்டமாக கருதப்படும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் நேற்று வியாழக்கிழமை முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஹிஸ்புல்லாவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையின் பின்னர் குற்றம்சாட்டப்பட்டவரின் பிணை மனுவை எதிர்க்கப் போவதில்லை என சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இதன்படி, மறுசீராய்வு மனுவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி மீள அழைக்குமாறு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இருதரப்பு சட்டத்தரணிகளுக்கும் தெரிவிக்குமாறு உத்தரவிட்டது.
சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் பணிப்புரைக்கமைய மனுதாரர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, ஷானக குரே மற்றும் நிரான் அங்கடெல் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற சட்டத்தரணி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், ஏப்ரல் 2020 இல் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார், மேலும் மதரஸாவில் விரிவுரை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரங்கள் இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
சுமார் 20 மாத சிறைவாசத்திற்குப் பின்னர் அண்மையில் பிணையில் வெளியேவந்த முஸ்லீம் கவிஞர் அஹ்னாப் ஜசீம் ஏறக்குறைய தனக்கும் சட்டத்தரணி ஹிஜாஸுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்த பயங்கரவாத எதிர்ப்புப் காவல்துறையினர் வீண் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.