யுத்த அகதிகளின் மீள்குடியேற்ற வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

0
Ivory Agency Sri Lanka

திருகோணமலையில் யுத்தத்தின்போது உயிர் பிழைத்து தமது கிராமங்களை விட்டு வெளியேறிய யுத்த அகதிகளுக்கு அரச அதிகாரிகள் மீள்குடியேற்ற வாய்ப்புகளை மறுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் அகதிகளான தமது வாழ்வாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக நிவாரணம் கோரியதை அடுத்து திருகோணமலை அநுராதபுரம் வீதியில் பன்குளத்தில் வசிக்கும் 320 குடும்பங்களை மீள்குடியேற்ற அப்பகுதி அரச அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் தேர்தல் வெற்றியின் பின்னர், மலையகத் தமிழர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகள் காரணமாக, 100 குடும்பங்கள் மலையகப் பகுதிகளில் இருந்து வெளியேறி இங்கு குடியேறினர்.

காந்திய இயக்கத்தின் ஆதரவுடன் பன்குளத்தில் குடியேறிய இவர்களைத் தவிர, 1980 மற்றும் 81இல் இடம்பெற்ற வன்முறைகளால் இன்னும் பல குடும்பங்கள் இவர்களுடன் இணைந்துள்ளன.

1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக உள்ளூர் சிங்களவர்களால் அரச அனுசரணையுடன் நடத்தப்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், அதன் பின்னர், பன்குளத்தில் வசிப்பவர்களில் சிலர் பத்து மைல்களுக்கு அப்பால் உள்ள திருகோணமலைக்கும், ஏனையவர்கள் பிழைப்புக்காக இந்தியாவிற்கும் தப்பிச் சென்றனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் சுமார் 15 குடும்பங்கள் பன்குளத்திற்கு வந்து மீள்குடியேறியுள்ளதாகவும், திருகோணமலை நகரில் வாழும் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, விவசாயத்தை வாழ்வாதாரமாக மேற்கொள்ளும் நோக்கில் தமது பெற்றோர் வாழ்ந்த இடங்களுக்கு திரும்பும் நம்பிக்கையில் இருப்பதாக கிழக்கு ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் திருகோணமலை அரச நிர்வாக அதிகாரிகள் பன்குளம் போர் அகதிகளுக்கு நிவாரணம் வழங்க மறுப்பதாக அவர்கள் முறையிட்டுள்ளனர்.

Facebook Comments