முஸ்லீம் எதிர்ப்பு பாகுபாடு அதிகரித்துள்ள நிலையில், கோவிட் 19 தொற்று சூழலில் நிலையான சட்டத்தை மீறும் வகையில் முஸ்லீமான ஜனாதிபதி சட்டத்தரணியை கைதுசெய்து ஸ்ரீலங்கா தடுத்துவைத்துள்ளமை குறித்து சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
ஒரு மாதத்திற்கு முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஹிஸ்புல்லா கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ளமை, தேசிய மற்றும் சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிய செயன்முறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், நீதித்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு எழுத்தியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், முறையான நடைமுறைகளை பின்பற்றி, வழக்கமான அடிப்படையில் அவர் தனது சட்டத்தரணிகளை சந்திக்க அனுமதிப்பதுடன், சட்டத்தரணி என்ற வகையில் அவரது தொழில்முறை சலுகைகளை மதிக்க வேண்டும் என சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவகம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை கோரியுள்ளது.
சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவகத்தின் தலைவரும் ஒய்வுபெற்ற நீதிபதியுமான மைக்கல் கேர்பே மற்றும் ஆன் ரம்பேர்க் ஆகியோரின் கையொப்பங்களுடன் இந்த கடிதம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு தாம் கைதுசெய்யப்படுவதற்கான காரணம் கூறப்படவில்லை.அவரை தடுத்துவைக்கும் உத்தரவு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பிறப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் 7 மற்றும் 9 ஆம் பிரிவுகளுக்கு அமைய 72 மணி நேரத்திற்குள் அவர் நீதவான் முன், முன்னிலைப்படுத்தப்படவில்லை என சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
இதனைவிட 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15, 16 மற்றும் 18 ஆம் திகதிகளில் இடம்பெற்ற குறுகிய சந்திப்புக்களில் ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு சட்ட உதவியை பெறுவதற்கு கூட இடமளிக்கப்படவில்லை.
இந்த சந்திப்புக்களில் சட்ட உதவியை பெறுவதற்கு இடமளிக்காமை ஒரு சட்டத்தரணியின் தொழிற்முறை சலுகைகளை மீறும் செயற்பாடு எனவும் சர்வதேச சட்ட்டதரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு பாரிய பங்களிப்பு வழங்கிய சிங்கள பௌத்த கடும்போக்குவாதிகளின் ஆத்திரத்திற்கு உள்ளான பல்வேறு உயர்மட்ட வழக்கு விசாரணைகளில் ஹெஜாஸ் ஹிஸ்புல்லா முன்னிலையாகியிருந்தார்.
சட்டத்திற்கு முரணாக 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்ற ஆட்சிக் கவிழ்ப்பு சவால் மற்றும் சிங்களப் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட குருநாகல் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் குற்றமற்றவர் என வாதிடுவது உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட வழக்குகளில் ஹெஜாஸ் ஹிஸ்புல்லா முன்னிலையாகியிருந்தார்.
கோவிட் 19 தொற்று சூழலில் முஸ்லீம் மக்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான பாரபட்சம் தீவிரமடைந்துள்ள சூழலில் ஹெஜாஸ் ஹிஸ்புல்லா கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கம் பொறுப்பு கூறுவதில் முக்கிய பங்கை வகிக்கும் வகையில், சட்டத்தரணிகளின் சுதந்திரம் மற்றும் அவர்களின் கருத்து வெளியிடுவதற்கான உரிமைக்கு ஸ்ரீலங்கா மதிப்பளிக்க வேண்டும் என சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவகம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் என்பது, உலகெங்கிலும் உள்ள சட்டத்தரணிகளை உள்ளடங்கிய சங்கம் என்பதுடன், உலகிலுள்ள சட்டத்தரணிகளின் முதன்மை அமைப்பாக காணப்படுகின்றது.
சட்டத்தரணி ஹிஸ்புல்லா சிறைவைக்கப்பட்டுள்ளமை, மனித விரோத சட்டம் என்பதுடன், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கடுமையான சரத்துக்களைக் கூட மீறும் வகையில் அமைந்துள்ளதாக ஐ.சி.ஜே எனப்படும் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு அண்மையில் விடுத்திருந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.